இந்தியா தனது தங்க இருப்பை விற்றதா? புளூம்பெர்க் செய்தியால் பரவிய பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தனது தங்க இருப்புகளை விற்றுள்ளதாகப் புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கை இந்திய நிதி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசின் 'PIB Fact Check' அமைப்பும் இணைந்து இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளன.
பின்னணி
புளூம்பெர்க் கணிப்பும் சர்ச்சையின் பின்னணியும்
புளூம்பெர்க் எகனாமிக்ஸ் அமைப்பின் பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தா, கடந்த மே 22-ஆம் தேதியுடன் முடிந்த இரண்டு வார காலத்திற்கான இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு தரவுகளை ஆய்வு செய்தார். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்த, ஆர்பிஐ சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்று, அதற்குப் பதிலாக 7.5 பில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு நாணய சொத்துக்களை வாங்கியிருக்கலாம் என்று அவர் தனது ஆய்வில் குறிப்பிட்டிருந்தார். இந்த யூகமே சர்ச்சைக்கு வித்திட்டது.
PIB
முற்றிலும் பொய்: PIB செய்தி
இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைத்தளமான எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ள PIB Fact Check அமைப்பு, "ஆர்பிஐ 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை விற்றதாகப் புளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் போலியானது (FAKE)" என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 2025-ல் 13.92 சதவீதமாக இருந்த தங்கத்தின் பங்கு, மார்ச் 31, 2026-ல் 16.70 சதவீதமாகவும், மே 22, 2026 நிலவரப்படி 16.85 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது இதற்குக் சான்றாகும்.
உண்மையான அளவு
ஆர்பிஐ வசம் இருக்கும் தங்கத்தின் உண்மையான அளவு
RBI-யின் மாதாந்திர புல்லட்டின் தரவுகளின்படி, இந்தியாவின் பௌதிகத் தங்க இருப்பு எவ்வித மாற்றமுமின்றி அப்படியே நீடிக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் 880.34 டன்னாக இருந்த தங்க இருப்பு, ஏப்ரல் மாதத்தில் 880.52 டன்னாகச் சற்று உயர்ந்தது. அதன் பிறகு தங்கம் எதுவும் விற்கப்படாமல் அதே 880.52 டன் அளவிலேயே தொடர்கிறது என ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் டாலர் மதிப்பு மாற்றங்கள் காரணமாகவே, தங்க இருப்பின் பண மதிப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றனவே தவிர, தங்கம் விற்கப்பட்டதால் அல்ல என்று பொருளாதார வல்லுநர்கள் விளக்குகின்றனர். பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.