Loading...
6 மாதங்களில் வெளிநாட்டுப் பெட்டகங்களில் இருந்து 60.08 டன் தங்கத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்தது ஆர்பிஐ; காரணம் என்ன?
6 மாதங்களில் வெளிநாட்டில் இருந்து 60 டன் தங்கத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்தது ஆர்பிஐ

6 மாதங்களில் வெளிநாட்டுப் பெட்டகங்களில் இருந்து 60.08 டன் தங்கத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்தது ஆர்பிஐ; காரணம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2026
12:22 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த செப்டம்பர் 2026 இறுதி வரையிலான 6 மாதங்களில் வெளிநாட்டுப் பெட்டகங்களில் இருந்த 60.08 டன் தங்கத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்து உள்நாட்டுப் பெட்டகங்களில் சேமித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் அரையாண்டு அறிக்கையின்படி செப்டம்பர் 30 நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் மொத்தத் தங்கம் கையிருப்பு 880.52 மெட்ரிக் டன்னாக உள்ளது. இதில் 740.13 டன் தங்கம் இந்தியாவிலும் 140.39 டன் தங்கம் இங்கிலாந்து வங்கி மற்றும் சர்வதேசத் தீர்வு வங்கியிலும் பாதுகாக்கப்படுகின்றன. இதன் மூலம் உள்நாட்டில் சேமிக்கப்படும் தங்கத்தின் பங்கு 77.2%-லிருந்து 84.05%-ஆக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை வீழ்ச்சி

சர்வதேச தங்கம் விலை வீழ்ச்சியால் 14.38%-ஆகக் குறைந்த தங்கத்தின் கையிருப்புப் பங்கு

ரிசர்வ் வங்கியின் மொத்தத் தங்கம் கையிருப்பு 880.52 டன்னாக மாறாமல் இருந்தபோதிலும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால் அதன் மதிப்பு சரிந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,721 ஆக இருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 9% குறைந்து $4,319 ஆகவும் தற்போது $3,590 ஆகவும் உள்ளது.

இதனால் தங்கம் கையிருப்பின் மதிப்பு மார்ச் இறுதியில் இருந்த $115.40 பில்லியனிலிருந்து செப்டம்பரில் $106.08 பில்லியனாகக் குறைந்தது.

அதேநேரம் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு $691.11 பில்லியனிலிருந்து $737.78 பில்லியனாக உயர்ந்ததால் அதில் தங்கத்தின் பங்கு 16.70%-லிருந்து 14.38%-ஆகக் குறைந்துள்ளது.

நடவடிக்கையின் பின்னணி

சாமானிய நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை உணர்த்துவது என்ன?

வெளிநாட்டுப் பெட்டகங்களில் உள்ள தங்கத்தை இந்தியாவிற்குக் கொண்டு வரும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை சில்லறைத் தங்கம் விலையையோ அல்லது ஆபரணங்கள் வாங்கும் செலவையோ நேரடியாகப் பாதிக்காது.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலில் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்கவும் சொத்துக்களைப் பன்முகப்படுத்தவும் மத்திய வங்கி மேற்கொள்ளும் நிர்வாக நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

சாமானிய மக்கள் மற்றும் முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை தங்கம் விலை தொடர்ந்து சர்வதேச சந்தைப் போக்கு அமெரிக்க டாலர் மதிப்பு வட்டி விகிதங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்களையே சார்ந்திருக்கும்.

ADVERTISEMENT