இனி உங்கள் யுபிஐ கணக்கை வேறொருவரும் பயன்படுத்தலாம்; ரிசர்வ் வங்கியின் புது அம்சம்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பயனர்களுக்கு நம் சார்பாக வேறொருவர் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக "டெலிகேட்டட் பேமென்ட்ஸ்" எனப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் ஒரு வங்கி கணக்கை வைத்திருப்பவர் மற்றொரு நபரை தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு அங்கீகரிக்க அனுமதிக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) நடந்த பணவியல் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, கொள்கை முடிவுகளை வெளியிடும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறைகளை மேம்படுத்துவதற்கும், சீரமைப்பதற்கும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு அங்கமாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது.
டெலிகேட்டட் பேமென்ட்ஸ் அம்சம் குறித்த முழு விபரம்
இந்த புதிய அம்சம் வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒரு முதன்மை வாடிக்கையாளருக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை தங்கள் வங்கிக் கணக்கு மூலம் பரிவர்த்தனைகளைச் செய்ய மற்றொருவரை அங்கீகரிக்க அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் மற்றொருவருக்கு யுபிஐ உடன் இணைக்கப்பட்ட தனி வங்கிக் கணக்கு எதுவும் தேவையில்லை. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த பணம் செலுத்தும் அம்சத்திற்கு கூடுதலாக, ரிசர்வ் வங்கி தனிநபர்கள் யுபிஐ மூலம் வரி செலுத்தும் வரம்பை ₹1 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தியுள்ளது.