இனி ரயிலில் சாப்பாடு கிடைக்காதா? சிலிண்டர் தட்டுப்பாட்டால் ரயில்வே கேட்டரிங் முடங்கும் அபாயம்; பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் அமெரிக்கா - ஈரான் போர்ச் சூழலால் இந்தியாவில் நிலவி வரும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு, தற்போது ரயில்வே சேவையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி காரணமாக, ரயில்களில் வழங்கப்படும் உணவுச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நீண்ட தூரம் பயணம் செய்யும் லட்சக்கணக்கான ரயில் பயணிகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அபாயம்
உணவுச் சேவை முடங்கும் அபாயம்
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) கீழ் இயங்கும் பல்வேறு ரயில்வே உணவகங்கள் மற்றும் ரயில்களில் உள்ள பேண்ட்ரி கார்கள், சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுகளைத் தயாரிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன. வணிக சிலிண்டர் விநியோகம் சீராகாத பட்சத்தில், ரயில்களில் சமைக்கப்பட்ட உணவுகளை வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ரெடி-டு-ஈட் வகை உணவுகளை மட்டும் வழங்க அல்லது சேவையை முழுமையாக நிறுத்தி வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் தங்கள் பயணத்தின் போது வீட்டிலிருந்தே உணவைக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம்.
மாற்று ஏற்பாடுகள்
பயணிகளுக்கான ஆலோசனைகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள்
தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, பயணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் திட்டமிடும் போது போதிய உணவு மற்றும் குடிநீரை உடன் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்களிலும் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலிப்பதால், அங்கு உணவுகள் கிடைப்பதிலும் தாமதம் அல்லது பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ரயில்வே நிர்வாகம் இந்த நெருக்கடியைச் சமாளிக்க மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துவது அல்லது முக்கிய நிலையங்களில் இருந்து உணவுகளைப் பெற்று விநியோகிப்பது போன்ற மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறது.
சிக்கல்
விநியோகச் சிக்கலும் அரசின் நிலையும்
இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், வணிக ரீதியிலான சிலிண்டர் தேவையை விட வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதன் காரணமாகவே ரயில்வே கேட்டரிங் போன்ற பெரிய அளவிலான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி உணவுகளின் விலை உயர்த்தப்படுவதைத் தடுக்கவும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிலிண்டர் விநியோகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்பதால், அதுவரை ரயில் பயணிகளில் உணவுத் தேவையில் அசௌகரியங்கள் தொடரக்கூடும்.