செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: 3 நாள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு மத்திய அரசு நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
செப்டம்பர் 28 முதல் தொடங்கவுள்ள தொடர்ச்சியான 3 நாட்கள் அகில இந்திய வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தை கருத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து பொதுத்துறை வங்கிகளும் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளும் இயங்கும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 26 மற்றும் செப்டம்பர் 27 வார இறுதி விடுமுறை நாட்களை தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30 வரை UFBU வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. பொதுமக்களின் அவசர வங்கி பணிகளை பாதிப்பின்றி மேற்கொள்ளும் வகையில், செப்டம்பர் 27 வங்கி கிளைகள், ATM-கள் மற்றும் கரன்சி செஸ்ட்கள் இயங்க ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி வழங்கியுள்ளது.
கோரிக்கை
வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்
சுமார் 90 சதவீத வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் UFBU அமைப்பின் முக்கியக் கோரிக்கைகள்:
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வாரத்தில் 5 நாட்கள் வேலை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ஓய்வூதியத் தொகையை புதுப்பித்து உயர்த்துவதுடன், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே மாதிரியான பஞ்சப்படி (DA) வழங்க வேண்டும்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) உள்ள ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) மாற வாய்ப்பளிக்க வேண்டும். செப்டம்பர் 30-ஆம் தேதி வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களது முக்கிய வங்கிப் பரிவர்த்தனைகளை செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையன்றோ அல்லது டிஜிட்டல் வங்கிச் சேவைகள் (UPI, இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங்) மூலமாகவோ மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.