
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது டிக்டாக்: ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்து என டிரம்ப் தகவல்
செய்தி முன்னோட்டம்
சீனாவை சேர்ந்த பிரபலமான வீடியோ செயலியான டிக்டாக் (TikTok) நிறுவனம் இனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்திட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கோடிக்கணக்கான அமெரிக்கப் பயனர்களைக் கொண்ட டிக்டாக் தளத்தின் தரவுகளை சீன அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அமெரிக்க வர்த்தகப் பகுதியை விற்பனை செய்யுமாறு டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'பைட்டான்ஸ்' (ByteDance) நிறுவனத்திற்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வந்தார். இல்லையெனில், டிசம்பர் மாதத்திற்குள் டிக்டாக்-க்கு தடை விதிக்கப்படும் என அவர் எச்சரித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா மற்றும் சீன அதிபர்களுக்கு இடையே பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஆவணம்
டிரம்ப் வெளியிட்ட ஆவணம்
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக் இயங்குவதற்கான ஒப்பந்த ஆவணத்தில் தானும் கையெழுத்திட்டு அதை டிரம்ப் வெளியிட்டார். அப்போது அவர், "அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ள டிக்டாக்கின் கொள்கைகளும், விதிகளும் சரியாக உருவாக்கப்படும்," என்று கூறினார். இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய துணை அதிபர் ஜேடி.வான்ஸ், "இந்த ஒப்பந்தம் பயனர்கள் பார்க்கும் உள்ளடக்கத்தை வடிவமைக்கும் வழிமுறைகளை அமெரிக்க முதலீட்டாளர்கள் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும்"என்றார். இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, டிக்டாக் நிறுவனத்தின் பங்குகளில் 80% அமெரிக்க நிறுவனங்களுக்கும், மீதமுள்ள 20% அல்லது அதற்கும் குறைவான பங்குகளை 'பைட்டான்ஸ்' நிறுவனத்திற்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், உலகின் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றின் மீதான சீனாவின் செல்வாக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.