LOADING...
அமெரிக்காவில் தயாரிக்கவிட்டால், செமி கண்டக்டர்களுக்கு 100% வரி விதிக்க டிரம்ப் திட்டம்
செமி கண்டக்டர்களுக்கு 100% வரி விதிக்க டிரம்ப் திட்டம்

அமெரிக்காவில் தயாரிக்கவிட்டால், செமி கண்டக்டர்களுக்கு 100% வரி விதிக்க டிரம்ப் திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 07, 2025
09:20 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் கம்ப்யூட்டர் சிப்கள் மற்றும் செமி கண்டக்டர்களுக்கு 100 சதவீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு, மின்னணு சாதனங்கள், ஆட்டோக்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப், ஒவல் அலுவலகத்தில் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை சந்தித்த போது, "நாங்கள் சிப்கள் மற்றும் செமிகண்டக்டர்கள் மீது தோராயமாக 100% வரி விதிப்போம். ஆனால் நீங்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்தால் எந்த கட்டணமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, மின்னணு சாதனங்களுக்கு தற்காலிகமாக விலக்கு அளித்த மூன்று மாத கால அவகாசத்தைத் தொடர்ந்து வந்துள்ளது.

சந்தையில் கலக்கம்

சந்தையில் கலக்கம், ஆனால் ஆப்பிள் பங்குகள் ஏற்றம்

டிரம்ப்பின் இந்த அறிவிப்பால், ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆசிய வர்த்தக நேரத்தில் சிப் துறையைச் சார்ந்த பங்குகள் சரிவை சந்தித்தன. எனினும் ஆப்பிள் நிறுவனம், அமெரிக்காவில் 100 பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்ய உறுதி அளித்த நிலையில், புதிய கட்டணங்களிலிருந்து சாத்தியமான விலக்குகளை பெறும் வாய்ப்பு அதிகம் என்பதால், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 8% ஏற்றம் கண்டன. சமீபத்தில் அமெரிக்காவில் பெரும் முதலீடுகளை அறிவித்துள்ள AI சிப் தயாரிப்பாளர் Nvidia-வும் வால்ஸ்ட்ரீட் சந்தையில் சிறு ஏற்றத்தைக் கண்டது. இந்நிறுவனம் டிரம்ப் நிர்வாகம் வந்ததிலிருந்து அதன் சந்தை மதிப்பில் $1 டிரில்லியனை ஈட்டியுள்ளது. கடந்த காலங்களில் நஷ்டமடைந்த இன்டெல் நிறுவன பங்குகளும் மேலேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளைவுகள்

டிரம்ப்பின் தீவிர வரி கொள்கை - விளைவுகள் என்ன?

டிரம்பின் புதிய வரி திட்டம், அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் முன்வைக்கப்படுகிறது. "விலைகள் உயர்ந்தாலும், நிறுவனங்கள் உள்நாட்டில் உற்பத்திக்கு கட்டாயப்படுத்தப்படும்" எனும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மாறாக, முன்னாள் அதிபர் ஜோ பைடன் துவக்கிய CHIPS மற்றும் அறிவியல் சட்டத்தின் கீழ், $50 பில்லியனுக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டு, உள்நாட்டு சிப் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த முறையில் தனக்கு விருப்பமில்லை என டிரம்ப் எதிர்த்து வருகிறார். சிப் துறையின் முக்கிய அமைப்பான Semicondutor Industry Association (SIA) இந்த முடிவில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. என்விடியா மற்றும் இன்டெல் போன்ற நிறுவனங்களும் இதுகுறித்த கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.