LOADING...
அதிகாலையில் வந்த அதிர்ச்சி மெயில்: ஆரக்கிள் நிறுவனத்தில் அதிரடி ஆட்குறைப்பு
மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது Oracle

அதிகாலையில் வந்த அதிர்ச்சி மெயில்: ஆரக்கிள் நிறுவனத்தில் அதிரடி ஆட்குறைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 01, 2026
08:35 am

செய்தி முன்னோட்டம்

உலகளாவிய மென்பொருள் ஜாம்பவனான ஆரக்கிள், தனது நிறுவனத்தில் மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. பல வாரங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பல ஊழியர்களுக்கு அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்பு

இந்தியா மற்றும் மெக்சிகோ அலுவலகங்களில் கடும் பாதிப்பு

ஆரக்கிள் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் உள்ள கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்களின்படி, ஆரக்கிள் இந்தியா அலுவலகங்களில் உள்ள பல குழுக்களில் சுமார் 20% முதல் 50% வரை ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மூத்த மேலாளர் ஒருவர் பகிர்ந்த தகவலின்படி, அவரது 20 பேர் கொண்ட குழுவில் 6 பேர் உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணிநீக்கம்

30,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு?

ஆரக்கிள் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், உலகளவில் சுமார் 20,000 முதல் 30,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் சுமார் 18 சதவீதமாகும். 'பிளைண்ட்' மற்றும் 'ரெடிட்' போன்ற தளங்களில் ஊழியர்கள் தங்களது வேதனையைப் பகிர்ந்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஊழியர்களுக்குக் கூட அதிகாலை 5 மணிக்கே பணிநீக்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் வந்த சில நிமிடங்களிலேயே உள்நுழைவு வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

காரணம்

ஏஐ (AI) முதலீடுகளுக்காக மாற்றப்படும் நிதி

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. ஆரக்கிள் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களில் (Data Centres) அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. இந்த உயர்தர ஏஐ திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காகவே, மற்ற பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் நீக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களும் ஏஐ முதலீடுகளுக்காக இதே போன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement