AI-க்காக 30,000 ஊழியர்கள் பலியா?- நிதி நெருக்கடியில் ஆரக்கிள்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் மென்பொருள் ஜாம்பவனான ஆரக்கிள் (Oracle), தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக 'TD Cowen' முதலீட்டு வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கிளவுட் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக, ஆரக்கிள் நிறுவனத்திற்கு சுமார் 156 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், வங்கி கடன்களுக்கான வட்டி விகித உயர்வு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, நிறுவனத்தால் நேரடியாக நிதியை திரட்ட முடியவில்லை. இதனால், சுமார் 20,000 முதல் 30,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதன் மூலம், 8 முதல் 10 பில்லியன் டாலர் வரையிலான நிதியை திரட்ட நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
தகவல்கள்
நிதி சுமையை குறைக்க வித்தியாசமான முயற்சி
ஏற்கனவே 2025 இறுதியில் சுமார் 10,000 பணியாளர்களை ஆரக்கிள் நீக்கியிருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த எண்ணிக்கை கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. * நிதியை திரட்ட 2022-ல் 28.3 பில்லியன் டாலருக்கு வாங்கிய 'Cerner என்ற ஹெல்த்கேர் மென்பொருள் நிறுவனத்தை விற்கவும் ஆரக்கிள் ஆலோசித்து வருகிறது. நிதிச் சுமையைக் குறைக்க, புதிய வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான வன்பொருள்களை(Chips) அவர்களே கொண்டு வரும் "Bring your own chip" என்ற புதிய முறையையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான், மெட்டா போன்ற மற்ற பெருநிறுவனங்களை போலவே, ஆரக்கிளும் தனது கவனத்தை முழுமையாக AI பக்கம் திருப்பியுள்ளது. பாரம்பரிய வேலைவாய்ப்புகளை குறைத்து, அந்தப் பணத்தை லாபகரமான AI தரவு மையங்களில் முதலீடு செய்வதே நிறுவனத்தின் தற்போதைய நோக்கமாக உள்ளது.