நிதி ஆதாரங்களைப் பலப்படுத்த ₹1,500 கோடி திரட்ட ஓலா எலக்ட்ரிக் இயக்குனர் குழு ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் இயக்குனர் குழு, பல்வேறு பத்திரங்களை வெளியிட்டு ₹1,500 கோடி வரை திரட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. எலக்ட்ரிக் வாகன (EV) உற்பத்தி நிறுவனமான ஓலா பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், உரிமைகள் வெளியீடு (Rights Issue), தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு முதலீடு (QIP), தனியார் ஒதுக்கீடு (Private Placement) அல்லது பிற சட்டப்பூர்வ முறைகள் மூலம் நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி, பங்குகள் அல்லது வாரண்ட்கள் போன்ற மாற்றத்தக்கப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் திரட்டப்படும். இருப்பினும், மூலதனத்தை உயர்த்த வேண்டியதற்கான துல்லியமான காரணங்களை அந்நிறுவனம் அறிக்கையில் வெளியிடவில்லை.
நிதி
நிதி திரட்டும் முயற்சிகள்
இந்தச் சமீபத்திய நிதி திரட்டும் முயற்சிக்கு முன்னதாக, இந்த ஆண்டின் மே மாதம், அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு ₹1,700 கோடியை கடன் பத்திரங்கள் மற்றும் காலக் கடன்கள் மூலம் திரட்ட ஒப்புதல் அளித்திருந்தது. தொடர்ந்து மூலதனத்தில் கவனம் செலுத்துவது, இந்த எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் கடுமையான போட்டி மற்றும் நிதிச் சவால்களை எதிர்கொள்வதைக் காட்டுகிறது. ஆகஸ்ட் 2024 இல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து, ஓலா எலக்ட்ரிக் பல குறிப்பிடத்தக்க பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் ₹428 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பைச் சந்தித்தது, இது முந்தைய ஆண்டை விட 23% அதிகமாகும்.