அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகரிப்பு; மத்திய நிதியமைச்சகம் தகவல்
மத்திய நிதி அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அக்டோபரில் ரூ. 1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த அக்டோபர் 2023 இல் வசூலிக்கப்பட்ட ரூ.1.72 லட்சம் கோடியிலிருந்து 8.9% அதிகரித்துள்ளது. இதற்கிடையே, 2024 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வசூல் தற்போதுவரை ரூ.12.74 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.11.64 லட்சம் கோடி இருந்த நிலையில், தற்போது 9.4% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் உச்ச மாத ஜிஎஸ்டி வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் பதிவாகியது. அந்த மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும் வளர்ச்சி
2023-24 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.18 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டை விட 11.7% அதிகமாகும். மாதாந்திர வசூல் சராசரியாக ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டின் மாத சராசரியான ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியது. இந்த நிலையான வளர்ச்சி இந்தியாவின் வலுவான உள்நாட்டு நுகர்வு மற்றும் இறக்குமதி தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது உலகளாவிய நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுவதாக உள்ளது. இந்தியா முழுவதும் வரி வசூலை சீராக்குவதை நோக்கமாகக் கொண்டு, 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.