ஏஐ பயன்பாடு அதிகரிப்பு; நான்காம் காலாண்டில் 78% வருவாய் அதிகரிப்பைப் பெற்ற என்விடியா நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
முன்னணி ஏஐ சிப் தயாரிக்கும் நிறுவனமான என்விடியா (NVIDIA), ஜனவரி 26, 2025 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 78% வருவாய் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
நிறுவனம் இந்த காலாண்டில் மொத்தமாக $39.3 பில்லியன் வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் $22.1 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நிறுவனம் 12% தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறிக்கிறது. லாபம் 80% உயர்ந்து $22.09 பில்லியனாக உயர்ந்து, சந்தை எதிர்பார்ப்புகளை விஞ்சியது.
2025 முழு நிதியாண்டில், என்விடியாவின் மொத்த வருவாய் $130.5 பில்லியனை எட்டியது. இது முந்தைய ஆண்டின் $60.9 பில்லியனை விட 114% கூடுதலாகும்.
சூப்பர் கம்ப்யூட்டர்
ஏஐ சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கான தேவை
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், என்விடியாவின் சிறப்பான வளர்ச்சிக்கு, அதன் பிளாக்வெல் ஏஐ சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கான அதிக தேவையே காரணம் என்று கூறினார்.
கணினி சக்தி அதிகரிப்பது ஏஐ திறன்களை மேம்படுத்துகிறது என்று கூறினார். என்விடியா அதன் பிளாக்வெல் கட்டமைப்பிலிருந்து நான்காம் காலாண்டில் $11 பில்லியன் வருவாயை ஈட்டியதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கோலெட் க்ரெஸ் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, என்விடியா 2026 நிதியாண்டில் முதல் காலாண்டு வருவாயை தோராயமாக $43 பில்லியன் கிடைக்கும் என கணித்துள்ளது.
சிறிது நேர சரிவு இருந்தபோதிலும், என்விடியா உலகின் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க பொது வர்த்தக நிறுவனமாக உள்ளது. முதலிடத்தில் ஆப்பிள் உள்ளது குறிப்பிடத்தக்கது.