
எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை
செய்தி முன்னோட்டம்
புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்வது மற்றும் அடையாள ஆவணங்களைப் புதுப்பிப்பது ஆகிய இரண்டையும் எளிதாக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் KYC வழிகாட்டுதல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.
இந்த முயற்சி, வங்கிகள் மற்றும் NBFCகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கான செயல்பாடுகளை நெறிப்படுத்த முயல்கிறது.
இந்த புதிய மாற்றங்கள், வாடிக்கையாளர் வசதியை மையமாகக் கொண்டது.
வழக்கமான KYC புதுப்பிப்புகளுக்கு, தனிநபர்கள் விரைவில் ஒரு எளிய செல்ப்-டிக்ளரேஷன் பயன்படுத்தி தங்கள் தகவல்கள் மாறவில்லை அல்லது அவர்களின் முகவரி விவரங்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்க முடியும்.
பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்கள், ATMகள் மற்றும் ஆன்லைன் வங்கி பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சேனல்கள் மூலம் இந்த அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.
ஆவணங்கள்
சிறு மாற்றங்களுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை
இந்த நடவடிக்கை, மீண்டும் மீண்டும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதைக் குறைக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வாடிக்கையாளர் ஒரு வங்கியிடம் ஆவணங்களை வழங்கிய பிறகு, மீண்டும் அதே ஆவணங்களை அவர்களிடம் கேட்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
"ஒரு வாடிக்கையாளர் ஒரு நிதி நிறுவனத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்தவுடன், மீண்டும் அதே ஆவணங்களைப் பெற நாம் வலியுறுத்துவதில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் மார்ச் மாதம் கூறினார்.
KYC
KYC புதுப்பிப்புகளுக்கான நெறிமுறைகள் மாற்றம்
ரிசர்வ் வங்கி அவ்வப்போது KYC புதுப்பிப்புகளுக்கான வழிமுறைகளை மாற்றியமைக்கிறது.
இது ஒரு வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த கிளையிலோ அல்லது நிதி நிறுவனத்தின் அலுவலகத்திலோ அவற்றை புதுப்பிக்க அனுமதிக்கிறது.
மேலும், ஆதார் OTP அடிப்படையிலான e-KYC மற்றும் வீடியோ அடிப்படையிலான வாடிக்கையாளர் அடையாள செயல்முறை (V-CIP) இப்போது இந்த புதுப்பிப்புகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
இது அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
ஒரு பொதுவான சிக்கலை நிவர்த்தி செய்யும் வகையில், புதிய விதிகள், நேரில் ஆன்போர்டிங்கிற்கு ஆதார் பயோமெட்ரிக் e-KYC ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அவர்களின் தற்போதைய முகவரி UIDAI தரவுத்தளத்தில் உள்ள முகவரியிலிருந்து வேறுபட்டால், சுய அறிவிப்பை வழங்க அனுமதிக்கும்.