
முதல் காலாண்டில் 35% வரை சரிந்த என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி நிலக்கரி மற்றும் எரிசக்தி நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனமானது தங்களது முதல் காலாண்டு முடிவுகளை தற்போது வெளியிட்டிருக்கிறது.
என்எல்சி இந்தியா வெளியிட்ட அறிக்கையின் படி, ஜூன் 30ம் முடிவடைந்த நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.2,601.01 கோடி வருவாயைப் பதிவு செய்திருக்கிறது அந்நிறுவனம்.
இது கடந்தாண்டு முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 15.95% குறைவு. கடந்த நிதியாண்டு முதல் காலாண்டில் ரூ.3,094.46 கோடி வருவாயைப் பதிவு செய்திருந்தது என்எல்சி.
அதேபோல், தற்போது அந்நிறுவனத்தின் நிகர லாபமும் ரூ.331.02 கோடியாகப் பதிவாகியிருக்கிறது. இது கடந்த நிதியாண்டு முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 34.59% குறைவு. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.506.08 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்தது என்எல்சி.
என்எல்சி
என்எல்சி இந்தியா பங்கு நிலவரம்:
என்எல்சியின் EBITDA-வும் கடந்த நிதியாண்டை விட 27.07% சரிந்து, ரூ.1061.72 கோடியாகப் பதிவாகியிருக்கிறது. இதுவே கடந்த நிதியாண்டில் ரூ.1,455.75 கோடியாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், என்எல்சி நிறுவனத்தின் EPS-ம் (Earnings Per Share) கடந்த நிதியாண்டில் இருந்த, ரூ.3.65-ல் இருந்து தற்போது ரூ.2.39 ஆகக் குறைந்திருக்கிறது.
ஜூலை 28, 2023 நிலவரப்படி, என்எல்சி இந்தியா நிறுவனப் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் ரூ.118.90 என்ற அளவில் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கின்றன.
முதலீட்டாளர்களுக்குக் கடந்த ஆறு மாதங்களில் 51.76% லாபத்தையும், கடந்த 12 மாதங்களில் 79.56% லாபத்தையும் என்எல்சி இந்தியா நிறுவனப் பங்குகள் ஈட்டியிருக்கின்றன.