ரிலையன்ஸ் குழுமத்தில் பெரும் மாற்றங்கள் அறிவிப்பு: குழும இயக்குநர் ஆகிறார்கள் அம்பானியின் வாரிசுகள்
செய்தி முன்னோட்டம்
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இயக்குநர் குழுவில் இருந்து விலகினார்.
மேலும், முகேஷ் அம்பானியின் வாரிசுகளான இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோர் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
முகேஷ் அம்பானியின் வாரிசுகளின் நியமனத்தை ரிலையன்ஸ் இயக்குநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த மூன்று அம்பானி வாரிசுகளும் கடந்த சில ஆண்டுகளாக சில்லறை விற்பனை, டிஜிட்டல் சேவைகள், எரிசக்தி மற்றும் பொருட்கள் வணிகங்கள் உட்பட ரிலையன்ஸின் முக்கிய வணிகங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் ரிலையன்ஸின் முக்கிய துணை நிறுவனங்களிலும் பணியாற்றி வந்ததாக ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஜியூப்கஞ்
நீதா அம்பானியின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது
கடந்த ஆண்டு, முகேஷ் அம்பானி(66), இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக தனது முதல் மகனான ஆகாஷ் அம்பானியை(31) நியமித்தார்.
ஆகாஷின் இரட்டை சகோதரியான இஷா, ரிலையன்ஸின் சில்லறை விற்பனைப் பிரிவை மேற்பார்வையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே நேரத்தில், முகேஷ் அம்பானியின் இளைய வாரிசான ஆனந்த் அம்பானி புதிய எரிசக்தி வணிகத் துறையில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று நீதா அம்பானியின் ராஜினாமாவை இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நீதா அம்பானி தொடர்ந்து அனைத்து வாரியக் கூட்டங்களிலும் நிரந்தர அழைப்பாளராக பங்கேற்பார் என்றும், அவர் அப்படி பங்கேற்பதனால் அவரது ஆலோசனையிலிருந்து நிறுவனம் தொடர்ந்து பயனடையும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.