இந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்
செப்டம்பர் மாதம் முடிந்து அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் நிலையி்ல், இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கான கால அவகாசம் நிறைவடையவிருக்கிறது. மேலும், பல புதிய விதிமுறைகளும் அக்டோபர் 1ம் தேதியிலிருந்து அமலாகவிருக்கின்றன. அப்படி, கால அவகாசம் முடியும் திட்டங்கள் மற்றும் அமலாகவிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்த பட்டியல் இது. டிசிஎஸ் (TCS) விதிமுறை: Tax Collection at Source (TCS) வரிவிதிப்பு விதிமுறையானது இந்த அக்டோபர் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. அதன் படி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இனி ரூ.7 லட்சத்திற்கும் மேல் கிரெட்டி கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்யும் பணத்திற்கு 20% வரி செலுத்த நேரிடும்.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம்:
இந்த செப்டம்பர் 30ம் தேதியுடன், இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது. இதன் பிறக, 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளே ஏற்க மறுக்கலாம். ஆனால், 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து மட்டுமே திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. சேமிப்பு கணக்குகளுக்கு ஆதார் அவசியம்: பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், சுகன்யா ஸ்மிரித யோஜனா உள்ளிட்ட திட்டங்களில் பணத்தை சேமித்து வருபவர்கள், இந்த மாத இறுதிக்குள், அத்திட்டங்களுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், அந்த சேமிப்புக் கணக்குகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மியூச்சுவல் ஃபண்டு கணக்குகளுக்கு பரிந்துரையாளர் பெயர் அவசியம்:
இந்த செப்டம்பர் 30ம் தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்டு கணக்குகளுக்கு பரிந்துரையாளர் ஒருவரின் பெயரை குறிப்பிடுவது அவசியம். இல்லையென்றால், குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டில் இருந்து நம்முடைய முதலீட்டுப் பணத்தை எடுக்க முடியாமல் தடை செய்யப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்டுக் கணக்குகளுக்கும் இது பொருந்து என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வேலைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியம்: இந்த அக்டோபர் 1ம் தேதி முதல் ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேர்வதற்கு பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யும் புதிய சட்டத்திருத்தம் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலாகிறது.