நியூயார்க் நகரில் தனக்கு சொந்தமான காண்டோவை விற்பனை செய்திருக்கும் முகேஷ் அம்பானி
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனக்கு சொந்தமான காண்டோ ஒன்றை விற்பனை செய்திருப்பதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. நியூயார்க் நகரின், மான்ஹாட்டனில் உள்ள 17 தளங்களைக் கொண்ட சூப்பீரியர் இன்க் கட்டிடத்தின் நான்காவது தளத்தில் உள்ள காண்டோவானது முகேஷ் அம்பானிக்கு தொடர்புடைய நிறுவனத்தின் பெயரில் இருந்திருக்கிறது. தற்போது அந்த காண்டோவானது 9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாய்) விற்பனை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. முக்கியப் பிரபலங்கள் பலரும் அந்தக் கட்டிடத்தில் காண்டோக்களை சொந்தமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பீரியர் இங்க் காண்டோவில் என்ன சிறப்பு?
தற்போது விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் காண்டோ இடம்பெற்றிருக்கும் கட்டிடமானது, 1919-ம் ஆண்டு கட்டப்பட்டதாம். அப்போது அது சூப்பீரியர் இங்க் தொழிற்சாலையாக இருந்திருக்கிறது. 2009-ல் அதனை சீரமைத்து குடியிருப்புப் பகுதியாக மாற்றியிருக்கிறார்கள். முகேஷ் அம்பானி விற்பனை செய்த காண்டோவானது, 2,406 சதுரடிகளைக் கொண்டது. இரண்டு படுக்கையறைகள், மூன்று குளியலறைகளுடன், ஹூட்சன் நதியைப் பார்த்தவாறு இருந்திருக்கிறது அவரது காண்டோ. 10 அடி உயர சீலிங், ஹார்ட்வுட் தரைகள், சத்தம் புகாத தன்மை கொண்ட ஜன்னல்கள் மற்றும் செஃப் சமயலறை என சகல வசதிகளையும் கொண்டிருந்திருக்கிறது அந்தக் காண்டோ. அதுவே தற்போது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.