
இந்தியாவில் வீடு வாங்க ஏற்ற நகரம் எது? நைட் ஃபிராங்க் நிறுவனம் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பொதுமக்கள் வீடு வாங்குவதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது இந்தியாவின் முன்னணி சொத்து விற்பனை ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்தியா (Knight Frank India).
ஒரு நகரத்தில், தாங்கள் வாங்கும் வீட்டுக் கடனின் மாதத் தவணைக்கு, ஒரு குடும்பம் தங்களுடைய மொத்த வருவாயில் எவ்வளவு சதவிகிதத்தை செலவு செய்ய வேண்டும் என்பதைக் கொண்டு இந்தப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது நைட் ஃபிராங்க் இந்தியா.
இந்தப் பட்டியலில் மிக அதிக மாதத் தவணை/வருவாய் விகிதத்துடன், வீடு வாங்க மிகவும் விலையுயர்ந்த நகரமாக முதலிடத்தில் இருக்கிறது மும்பை. அதேபோல், குறைந்த மாதத் தவணை/வருவாய் விகிதத்துடன், வீடு வாங்குவதற்கு ஏற்ற நகரமாக குஜராத்தின் தலைநகர், அகமதாபாத் கடைசி இடத்தில் இருக்கிறது.
வீடு
வீடு வாங்க ஏற்ற நகரம்:
மும்பையில் வீட்டுக் கடன் உதவியுடன் வீடு ஒன்றை வாங்க, ஒரு குடும்பம் தங்களது மொத்த வருவாயில் 55%-த்தை மாதத் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஹைதராபாத்தில், 31% வருவாய மாதத் தவணையாகவும், மூன்றாமிடத்தில் இருக்கும் டெல்லியில் 30% வருவாயை மாதத் தவணையாகவும் செலுத்த வேண்டியிருக்கும்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது. சென்னையில் வீடு ஒன்றை வாங்கினால், மொத்த வருவாயில் 28%-த்தை மாதத் தவணையாக ஒரு குடும்பம் செலுத்த வேண்டியிருக்கும் என அந்நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வீடு வாங்க ஏற்ற நகரமாக குறிப்பிடப்பட்டிருக்கும் அகமதாபாத்தில், ஒரு குடும்பமானது 23% வருவாயை வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையாக செலுத்த வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.