டாடா அறக்கட்டளையில் இருந்து மெஹ்லி மிஸ்ட்ரி விலகினார்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் குழுமமான டாடா சன்ஸ்-இன் (Tata Sons Pvt. Ltd.) முடிவெடுக்கும் அமைப்பான டாடா அறக்கட்டளைகளில்(Tata Trusts) இருந்து அதன் அறங்காவலரான மெஹ்லி மிஸ்ட்ரி விலகியுள்ளார். இந்த விலகல், அறக்கட்டளையின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்திய ஒரு பிளவுபட்ட விவாதத்துக்கு முடிவுகட்டுகிறது. மெஹ்லி மிஸ்ட்ரியின் விலகல், அவரை 'ஆயுட்கால அறங்காவலர்' (trustee for life) ஆக மீண்டும் நியமிப்பதை தடுக்கும் ஒரு தீர்மானத்தை தொடர்ந்து வந்துள்ளது. அக்டோபர் 28, 2025 அன்று, அறங்காவலர்களான நோயல் டாடா, வேணு சீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகியோர் மிஸ்ட்ரியை மீண்டும் நியமிப்பதற்கு எதிராக வாக்களித்தனர். மற்ற மூன்று அறங்காவலர்கள் (பிரமித் ஜாவேரி, டேரியஸ் காம்பாட்டா மற்றும் ஜஹாங்கீர் எச்.சி. ஜஹாங்கீர்) இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கடிதம்
மெஹ்லி மிஸ்ட்ரியின் கடிதம்
இந்த விலகல் குறித்து டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா உள்ளிட்ட பிற அறங்காவலர்களுக்கு மிஸ்ட்ரி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில், டாடா அறக்கட்டளைகள் சர்ச்சையில் சிக்காமல் இருப்பதை உறுதிசெய்வது காலஞ்சென்ற ரத்தன் டாடாவுக்கு தான் அளித்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். தனது விலகல் கடிதத்தில், மிஸ்ட்ரி மறைந்த ரத்தன் டாடா அடிக்கடி தனக்கு கூறிய ஒரு மேற்கோளைப் பகிர்ந்துள்ளார்:"சேவை செய்யும் நிறுவனத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை". "எனவே, ரத்தன் டாடாவின் உணர்வின்படி, அவர் எப்போதும் பொதுநலனை தனது நலனுக்கு முன்னால் வைத்தது போல, மற்ற அறங்காவலர்களின் எதிர்கால நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி மற்றும் பொதுநலன் ஆகிய கொள்கைகளால் வழிநடத்தப்படும் என்று நான் நம்புகிறேன்," என்றும் மிஸ்ட்ரி வலியுறுத்தியுள்ளார்.