உங்கள் பாக்கெட்டைப் பாதிக்கும் முக்கிய மாற்றங்கள்! ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் வங்கி, ஐடிஆர் மற்றும் எல்பிஜி புதிய விதிகள்
செய்தி முன்னோட்டம்
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவின் நிதி மற்றும் வங்கித் துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இது சாதாரண மக்கள், வங்கி வாடிக்கையாளர்கள், கடன் அட்டை பயன்படுத்துபவர்கள், வரி செலுத்துவோர் மற்றும் ரயில் பயணிகளின் நிதி மேலாண்மையில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும். ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, CKYC 2.0 அறிமுகம், ரிசர்வ் வங்கியின் வட்டி விகித கொள்கை முடிவு மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை திருத்தம் வரை ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்களை விரிவாகப் பார்ப்போம்.
#1
ஐடிஆர் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்
வருமான வரித் தணிக்கைக்கு உட்படாத சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் 'ITR-3', 'ITR-4' படிவங்களைப் பயன்படுத்தி வரி தாக்கல் செய்யும் நபர்களுக்கு ஆகஸ்ட் 31, 2026 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேதிக்குள் கணக்கு தாக்கல் செய்யத் தவறினால், பிரிவு 234Fன் கீழ் ₹5,000 வரை தாமதக் கட்டணமும், பிரிவு 234Aன் கீழ் எஞ்சிய வரித் தொகைக்கான வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் முன்கூட்டியே தாக்கல் செய்வது அவசியமாகும்.
#2
'CKYC 2.0' புதிய கட்டமைப்பு அறிமுகம்
வாடிக்கையாளர் சரிபார்ப்பு முறையை மேலும் எளிமையாக்கும் நோக்கில் புதுப்பிக்கப்பட்ட 'Central KYC 2.0' கட்டமைப்பு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் ஒருமுறை கேஒய்சி சரிபார்ப்பு செய்த வாடிக்கையாளர்கள், தங்களது சம்மதத்துடன் பிற நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் அதே ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்காமல் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
முதற்கட்டமாக வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
#3
வங்கிச் சேவை கட்டணங்கள் திருத்தம்
பல்வேறு வங்கிகள் தங்களது சேவை கட்டணங்களை ஆகஸ்ட் 1 முதல் மாற்றியமைக்கின்றன.
உதாரணத்திற்கு, உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கான எஸ்எம்எஸ் கட்டணத்தை ஒரு குறுஞ்செய்திக்கு ₹0.30 என மாற்றியமைக்கிறது (மாதத்திற்கு அதிகபட்சமாக ₹10 வசூலிக்கப்படும்).
பிற வங்கிகளும் தங்களது டெபிட் கார்டு பராமரிப்பு மற்றும் கணக்குச் சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைக்கக் கூடும் என்பதால் வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.
#4
கிரெடிட் கார்டு கட்டணங்கள் மற்றும் வட்டி தளர்வு
ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதலின்படி, கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகளுக்கான நிதிக் கட்டணங்களை கணக்கிடும் போது, செலுத்தப்படாத அபராதங்கள் மற்றும் வரிகளை உள்ளடக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் கார்டு நிலுவைத் தொகையை வைத்துப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் வட்டி சுமையைக் குறைக்கும்.
மேலும், சில வங்கிகள் தங்களது கார்டு ரிவார்ட் புள்ளிகள் மற்றும் ஆண்டுக் கட்டண முறைகளிலும் மாற்றங்களை அறிவிக்கவுள்ளன.
#5
தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய நடைமுறை
ரயில்வே பயணிகளின் வசதிக்காக ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
இதன்படி கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு முன்பாகவே 'டோக்கன்' வழங்கப்படும்.
இதனால் பயணிகள் டோக்கன் வாங்கிய பிறகு மீண்டும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரே நடைமுறையில் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
#6
எல்பிஜி விலை திருத்தம் மற்றும் ஆர்பிஐ கொள்கை முடிவு
மாதத்தின் முதல் நாளான ஆகஸ்ட் 1 அன்று சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இண்டேன், பாரத் கேஸ், எச்பி கேஸ் ஆகிய வீட்டு உபயோக மற்றும் வணிக உருளைகளின் புதிய விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கும்.
இதற்கிடையே, ஆகஸ்ட் 3 முதல் 5 வரை நடைபெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) பணவியல் கொள்கை குழுக் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் குறித்த முக்கிய முடிவு ஆகஸ்ட் 5 அன்று அறிவிக்கப்பட உள்ளது.