
டிம் குக் ஓய்வு? ஆப்பிளின் புதிய CEO-வாக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்கிறாரா?
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் நிறுவனத்தின் நீண்டகால தலைமை செயல் அதிகாரியான (CEO) டிம் குக் ஓய்வு பெற தயாராகி வருவதாகவும், அவருக்குப் பதிலாக நிறுவனத்தின் வன்பொருள் பிரிவின் தலைவர் ஜான் டெர்னஸ் புதிய CEO-வாகப் பொறுப்பேற்கக்கூடும் என்றும் ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தியின்படி, ஆப்பிள் தனது உயர் நிர்வாகத்தில் தலைமை மாற்றத்திற்கான செயல்முறையை தொடங்கியுள்ளதாக ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் தெரிவித்துள்ளார்.
காரணம்
CEO தேர்விற்கு ஜான் டெர்னஸ் பரிந்துரைக்கப்பட்டது ஏன்?
டிம் குக்கின் வாரிசாக டெர்னஸ் முன்னிலை வகிக்கிறார். தற்போது ஆப்பிளின் வன்பொருள் பொறியியலின் மூத்த துணை தலைவராக உள்ள ஜான் டெர்னஸ் (வயது 50), ஐபோன், ஐபேட் மற்றும் மேக்ஸ் உள்ளிட்ட ஆப்பிளின் முக்கியத் தயாரிப்புகளின் வடிவமைப்புகளை மேற்பார்வையிட்டுள்ளார். இவர் 2001ஆம் ஆண்டில் நிறுவனத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த தலைவர் பதவிக்கு பரிந்துரைப்பு பட்டியலில் இருந்த முக்கிய போட்டியாளர்கள்- ஜெஃப் வில்லியம்ஸ் உட்பட பலரும் சமீபத்தில் நிறுவனத்திலிருந்து வெளியேறியதால், டெர்னஸை தேர்ந்தெடுக்கும் முடிவுக்கு ஆப்பிள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்தத் தகவல்கள் குறித்து ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை