ஊழியர்களுக்கு 1% சம்பள உயர்வு அறிவித்த காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்
காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சிடிஎஸ்) சில ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வாக 1% மட்டுமே வழங்கியுள்ளது. இது தொடர்பாக தி எகனாமிக் டைம்ஸில் வெளியான அறிக்கையின்படி, சிடிஎஸ் நிறுவனம் நான்கு மாத தாமதத்திற்குப் பிறகு, இந்த குறைவான சம்பள உயர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. சம்பள உயர்வு 1% முதல் 5% வரை இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அறிக்கையில், "3 ஸ்டார் மதிப்பீட்டிற்கு, உயர்வு 1-3% ஆகும், அதே நேரத்தில் 4 ஸ்டார் மதிப்பீட்டிற்கு 4% உயர்வு வழங்கப்பட்டது மற்றும் 5 ஸ்டார் மதிப்பீட்டில் ஒரு பணியாளருக்கு சுமார் 4.5% மற்றும் அதிகபட்சம் 5% சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக ஊழியர்களைக் கொண்டுள்ள சிடிஎஸ்
குறைந்த சம்பள உயர்வு சர்ச்சைக்கு மத்தியில் காக்னிசன்ட் நிறுவனம், கடந்த ஒரு தசாப்தத்தில் மிகக் குறைந்த தொடக்கச் சம்பளத்தை (ஆண்டுக்கு ₹2.52 லட்சம்) சமீபத்தில் அறிவித்ததும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், இந்தியாவில் தோராயமாக 2,54,000 பேரைப் பணியமர்த்துகிறது. இது அதன் ஒட்டுமொத்த பணியாளர்களில் 70 சதவீதத்தைக் கொண்டுள்ளது. காக்னிசென்ட் இந்தியாவின் முக்கிய அவுட்சோர்சிங் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தாலும், அதன் சமீபத்திய சம்பளத் தொகுப்பு 2002ஐ நினைவுபடுத்தும் அளவிற்கு நிறுவனம் குறைத்துள்ளது என்று தொழில் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கிடையே ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2024-25இன் இரண்டாவது காலாண்டில், காக்னிசண்ட் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 22.2% அதிகரிப்பு மற்றும் நிகர லாபத்தில் 3.6% தொடர்ச்சியான உயர்வை அறிவித்தது.