உயரும் தங்க விலை.. தற்போதைய நிலையில் தங்கம் வாங்கலாமா? கூடாதா?
உலகில் எந்த ஒரு சர்வதேச பொருளாதார சிக்கல் எழும் போதும், எந்த இரு நாடுகள் போரைத் தொடங்கும் போதும், தங்கம் விலை உயர்வைச் சந்திக்கும். ஆம், பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக பிற பொருட்களின் தேவை குறைந்து, அதன் விலைகள் வீழ்வதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. ஆனால், தங்கத்தை முதலீட்டாளர்கள் எப்போதும் ஒரு பாதுகாப்பான முதலீடாகவே கருதுகின்றனர். தங்கத்தின் தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்பது தான் அதற்கான காரணம். சில நாட்களுக்கு முன்பு, இஸ்ரேல் மீது பாலத்தீனத்தின் ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, தங்க விலையானது மிக அதிக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. தற்போது பண்டிகை காலமும் அருகிலிருக்கும் நிலையில், தங்கம் வாங்குவது சிறந்த முடிவா?
தங்கம் வாங்கலாமா? கூடாதா?
தற்போதைய நிலையில் தசரா பண்டிகை வரை, சிறிய அளவில் தங்கத்தின் விலை உயரவே வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தசராவிற்குப் பின்பு தங்கம் விலை சற்று குறைந்து, மீண்டும் தீபாளிப் பண்டிகையையொட்டி விலை உயர வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பிரச்சினையில் அதிரடியான முடிவுகள் எடுக்கப்படாத வரையில், அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது தற்போதயை நிதிக் கொள்கையிலிருந்து மாற்றம் செய்யாத வரையில், தங்கத்தின் விலை அதிகளவில் உயர வாய்ப்பில்லை எனக் கூறியிருக்கின்றனர் நிபுணர்கள். உடனடியாகத் தங்கம் வாங்க வேண்டிய தேவை இல்லாதவர்கள், தங்கம் வாங்கும் திட்டம் இருந்தால், ஒரு ஆறு மாத காலத்திற்கு அந்த முடிவை தள்ளிப் போடுவதை பரிசீலனை செய்யவும் அவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.