LOADING...
100 சதவீத அந்நிய நேரடி முதலீடு? காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு
காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல்

100 சதவீத அந்நிய நேரடி முதலீடு? காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2025
04:06 pm

செய்தி முன்னோட்டம்

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்கும் வகையில், காப்பீட்டுத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, 2047 க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை அடைவதற்காக, அரசின் நிதித்துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, காப்பீட்டுச் சட்டம் 1938, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம் 1956 மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் 1999 உள்ளிட்ட முக்கியச் சட்டங்களைத் திருத்த முன்மொழிகிறது. இது, வெளிநாட்டு முதலீட்டு விதிகளை எளிமையாக்குவதுடன், கூட்டு உரிமத்திற்கான விதிமுறைகளையும், செலுத்தப்பட்ட மூலதனத்தைக் குறைப்பதற்கான விதிமுறைகளையும் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடு

காப்பீட்டுத் துறையில் அதிக முதலீடு

இந்தச் சட்டத் திருத்தம், பாலிசிதாரர்களுக்குப் பயன் அளிப்பதுடன், சந்தை செயல்திறனை மேம்படுத்தி, காப்பீட்டுத் துறையில் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும். இந்த புதிய கொள்கை, தங்கள் முழு பிரீமியத்தையும் இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். காப்பீட்டுத் துறை ஏற்கனவே ₹82,000 கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில், இந்த புதிய கொள்கை மேலும் முதலீடுகளை ஊக்குவித்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு கடைசியாக 2021 ஆம் ஆண்டு 49% இல் இருந்து 74% ஆக உயர்த்தப்பட்டது.