இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2017-18 ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கு முடித்து வைப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நுண்ணறிவு இயக்குநரகம் 2017-18 நிதியாண்டுக்கான இன்ஃபோசிஸ் தொடர்பான வரி வழக்கை முடித்துக் கொண்டுள்ளது. இந்த காலகட்டத்திற்கான ஜிஎஸ்டி ₹3,898 கோடி என்று நிறுவனம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. முன்னதாக, கர்நாடக மாநில ஜிஎஸ்டி ஆணையம் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வழங்கிய ₹32,000 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் வழங்கி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டிஆணையம் அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது 2017-18 நிதியாண்டிற்கான வழக்கு ஆய்வு செய்யப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. எனினும், முன்பு ஜிஎஸ்டி ஆணைய நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட அடுத்தடுத்த நிதியாண்டுகளுக்கான (2018-19 முதல் 2021-22) வரி ஏய்ப்பு குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
இன்ஃபோசிஸ் விவகாரம் குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஆய்வு
இன்ஃபோசிஸ் அதன் வெளிநாட்டு துணை நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் சேவைகளுக்கு, ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசத்தின் (ஆர்சிஎம்) கீழ், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) செலுத்தப்படாததைச் சுற்றியே இந்தப் பிரச்சினை சுழல்கிறது. இந்த விவகாரம் ஒருபுறம் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) தற்போது, ஜூன் 26 சுற்றறிக்கையின் கீழ் வழக்கை மதிப்பாய்வு செய்து வருகிறது. சேவைகளை இறக்குமதி செய்வதற்கு, முழு உள்ளீட்டு வரி ரிட்டர்ன் கிடைத்தால், தொகையை செலுத்த வேண்டியதில்லை என்று இந்த ஆவணம் கூறுகிறது. எனினும், இந்த மதிப்பாய்வுக்கு இன்ஃபோசிஸ் தகுதி பெறுகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.