
தங்களது ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்ட இன்ஃபோசிஸ்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஓன்றாக விளங்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம், தங்களது ஊழியர்களுக்கான ஊக்க ஊதிய (Bonus) அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான ஊக்க ஊதியத்தை தங்கள் ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் வழங்க முடிவு செய்திருக்கிறது அந்நிறுவனம்.
அதாவது, 2023-24 நிதியாண்டின், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டிற்கான ஊக்க ஊதியத்தை வழங்கத் திட்டமிட்டிருக்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் சராசரியாக 80% வரை ஊக்க ஊதியம் வழங்கத் திட்டமிட்டிருக்கும் நிலையில், அதனை இந்த மாத இறுதிக்குள்ளேயே வழங்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் யார் யாரெல்லாம் ஊக்க ஊதியம் பெறவிருக்கிறார்கள்?
அந்நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின்படி ஆறாம் நிலையில் செயல்படக்கூடிய மேலாளர்கள் மற்றும் அதற்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தற்போது ஊக்க ஊதியம் வழங்கவிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ஆனால், தொடக்க நிலை பணியாளர்களுக்கு இந்த ஊக்க ஊதிய அறிவிப்பு இல்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
சராசரியாக 80% என்றாலும், அனைத்து ஊழியர்களுக்கும் இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் காலாண்டில் தனிப்பட்ட ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் செயல்திறனை பொருத்து அவர்களுக்கான ஊக்கத் தொகையிலும் வேறுபாடு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஊழியர்களின் உயரதிகாரிகள், அவர்களுக்கான ஊக்க தொகையை முடிவு செய்து இந்த வாரத்திற்குள் அறிவிப்பு வெளியிடுவார்கள் எனத் தங்களுடைய சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.