எரிபொருள், மின்சார விலை உயர்வால் மொத்த விலை பணவீக்கம் 12.29% ஆக அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு எண் (WPI) அடிப்படையிலான பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 12.29 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்கட்கிழமை (நவம்பர் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 11.39 சதவீதமாக இருந்த பணவீக்கம், அக்டோபரில் மேலும் அதிகரித்துள்ளது. 2022-23 அடிப்படை ஆண்டாகக் கொண்ட மொத்த விலைக் குறியீட்டு எண் 112.5-லிருந்து 113.3-ஆக உயர்ந்துள்ளதே இதற்கு காரணமாகும்.
எரிபொருள்
32.84 சதவீதமாக எகிறிய எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவு பணவீக்கம்
மொத்த விலை பணவீக்க உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரப் பொருட்களின் விலை உயர்வு அமைந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 25.85 சதவீதமாக இருந்த இப்பிரிவின் பணவீக்கம், அக்டோபரில் 32.84 சதவீதமாகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலை அதிகரித்ததால் இப்பிரிவின் குறியீட்டு எண் 110.5-லிருந்து 115.7-ஆக உயர்ந்துள்ளது.
உணவு
முதன்மைப் பொருட்கள் உயர்ந்த நிலையில் சற்றுக் குறைந்த உணவு மற்றும் தயாரிப்புப் பணவீக்கம்
மற்ற பிரிவுகளைப் பொறுத்தவரை, முதன்மைப் பொருட்களின் (Primary Articles) பணவீக்கம் செப்டம்பரில் 8.67 சதவீதமாக இருந்த நிலையில் அக்டோபரில் 9.24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேசமயம் தயாரிப்புப் பொருட்கள் (Manufactured Products) பிரிவின் பணவீக்கம் 9.76 சதவீதத்திலிருந்து 9.54 சதவீதமாகவும், மொத்த விலை உணவுப் பணவீக்கம் (WPI Food Index) 8.66 சதவீதத்திலிருந்து 8.58 சதவீதமாகவும் சற்றுக் குறைந்துள்ளன.
ஆகஸ்ட் மாத இறுதிப் பணவீக்கம் 9.92 சதவீதமாக மாற்றமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொழில்துறை எச்சரிக்கை
உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும் எனத் தொழில்துறை எச்சரிக்கை
அக்டோபர் மாத மொத்த விலை பணவீக்க உயர்வு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள PHDCCI தலைவர் அனில் குப்தா, எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்நாட்டு செலவுக் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் மற்றும் மின்சார விலை உயர்வு போக்குவரத்து மற்றும் சரக்குக் கையாளுகை செலவுகளை உயர்த்துவதால், வரும் மாதங்களில் நிறுவனங்களின் உற்பத்தி செலவு மற்றும் பொருட்களின் விற்பனை விலையில் இது எதிரொலிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.