LOADING...
சரிவிலிருந்து மீண்ட ரூபாய்: மீண்டும் வலுவான நிலைக்குத் திரும்புமா?
சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்பு

சரிவிலிருந்து மீண்ட ரூபாய்: மீண்டும் வலுவான நிலைக்குத் திரும்புமா?

எழுதியவர் Sekar Chinnappan
Dec 19, 2025
12:48 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வந்தது. குறிப்பாக, டிசம்பர் 16 அன்று முதல்முறையாக 91 ரூபாயைத் தாண்டி (91.14 வரை) சரிந்தது. இது ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக ரூபாயை மாற்றியது. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அதிரடித் தலையீடு மற்றும் டாலர் விற்பனை காரணமாக, தற்போது ரூபாய் மீண்டும் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) அன்று காலை வர்த்தகத்தில் ரூபாய் 89.96 என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது, இது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

காரணிகள்

ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணமானக் காரணிகள்

இந்தத் திடீர் சரிவிற்கு இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்புகள் குறித்த கவலைகள் மற்றும் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் (FII Outflows) அதிகளவில் வெளியேறியது ரூபாயின் மதிப்பைக் கடுமையாகப் பாதித்தது. மேலும், இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கானத் தேவை அதிகரித்ததும், வர்த்தகப் பற்றாக்குறை குறித்த அச்சமும் இந்தச் சரிவைத் தீவிரப்படுத்தியது.

கணிப்புகள்

வருங்காலக் கணிப்புகள் மற்றும் எஸ்பிஐ அறிக்கை

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, தற்போதைய ரூபாயின் வீழ்ச்சி தற்காலிகமானது என்றும், 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் (அக்டோபர் 2026 முதல் மார்ச் 2027 வரை) ரூபாய் மிகவும் வலுவாக மீண்டு வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுவாக இருப்பதால், ரூபாயின் மதிப்பை மேலும் சரிய விடாமல் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், உலகளாவிய அரசியல் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தே ரூபாயின் அடுத்தக்கட்ட நகர்வு அமையும்.

Advertisement