ஷாக் நியூஸ்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முதல்முறையாக 93ஐத் தாண்டியது
செய்தி முன்னோட்டம்
இந்திய வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93ஐக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று (மார்ச் 20) காலை வர்த்தகத் தொடக்கத்தில் 19 பைசா சரிந்து, ஒரு டாலரின் மதிப்பு ₹93.08 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த புதன்கிழமை வர்த்தக முடிவில் இது ₹92.89 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
காரணங்கள்
ரூபாய் மதிப்பு குறைய 3 முக்கிய காரணங்கள்
மத்திய கிழக்கு நாட்டுப் போர்: ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக உலகளவில் முதலீட்டாளர்கள் டாலரை பாதுகாப்பான முதலீடாகக் கருதி வாங்கி வருகின்றனர். இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து, ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்கிறது. தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $106.9 என்ற அளவில் உயர்ந்துள்ளதால், டாலருக்கான தேவை அதிகரித்து ரூபாயின் மதிப்பை அழுத்துகிறது. அந்நிய முதலீடுகள் வெளியேற்றம்: இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் சுமார் ₹7,558 கோடி மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன.
ஆர்பிஐ
ரிசர்வ் வங்கியின் தலையீடு
ரூபாய் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி சந்தையில் டாலர்களை விற்பனை செய்து வருவதாக அந்நியச் செலாவணி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், உலகளாவிய காரணிகளால் ரூபாயின் பலவீனம் தொடர்ந்து நீடிக்கிறது. ரூபாய் மதிப்பு சரிந்த போதிலும், இன்றைய பங்குச் சந்தை ஓரளவு மீண்டுள்ளது. சென்செக்ஸ் 960 புள்ளிகள் உயர்ந்து 75,167 என்ற அளவிலும், நிஃப்டி 311 புள்ளிகள் உயர்ந்து 23,313 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.