சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கவிருக்கும் மத்திய அரசு
இந்தியா, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதித்ததோடு, வெங்காய ஏற்றுமதியின் மீது 40% ஏற்றுமதி வரி விதித்திருக்கும் நிலையில், தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கும் தடை விதிக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. கரும்பை அதிகம் விளைவிக்கும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், சராசரியை விட 50% குறைவாகவே இந்த ஆண்டு மழைப் பொழிவு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்களை அளித்திருக்கிறது. இதன் காரணமாக கரும்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், செப்டம்பரில் தொடங்கும் அடுத்த பருவத்தில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக, பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரிகள் சிலர் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
உள்நாட்டுத் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசு:
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், உள்நாட்டுத் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கவே இந்த தடை மத்திய அரசு அமல்படுத்தவிருப்பதாகத் தகவலறிந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டு தான், சர்க்கரை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த, அதன் மீது 20% ஏற்றுமதி விதித்தது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவிருக்கிறது. ஜூலை மாதம், கடந்த 15 மாதங்களை விட கூடுதலாக 7.44% ஆக இருந்திருக்கிறது சில்லறைப் பணவீக்கம். அதேபோல் உணவுப் பணவீக்கமும், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் 11.5% ஆக ஜூலையில் அதிகரித்திருக்கிறது. முதலில் உள்நாட்டு சர்க்கரைத் தேவையைப் பூர்த்தி செய்து பின்பு, கூடுதலாக இருக்கும் கரும்புகளைக் கொண்டு எத்தனால் தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.