LOADING...
வாரத்திற்கு 3,000 விமானங்கள் ரத்து; ஏப்ரல் முதல் டிக்கெட் விலை உயருமா?
விமான நிறுவனங்கள் தங்களது கோடைகால விமான சேவைகளை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளன

வாரத்திற்கு 3,000 விமானங்கள் ரத்து; ஏப்ரல் முதல் டிக்கெட் விலை உயருமா?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 27, 2026
07:37 am

செய்தி முன்னோட்டம்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் தங்களது கோடைகால விமான சேவைகளை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளன. மார்ச் 29 முதல் அக்டோபர் 31 வரை அமலுக்கு வரும் புதிய அட்டவணையில், கடந்த ஆண்டை விட வாரத்திற்குச் சுமார் 3,000 விமானங்கள் குறைவாகவே இயக்கப்படும். கடந்த ஆண்டு கோடைகாலத்தில் வாரத்திற்கு 25,610 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது 22,600 ஆகக் குறையவுள்ளது. இது சுமார் 12 சதவீத வீழ்ச்சியாகும்.

காரணங்கள்

சேவை குறைப்பிற்கான காரணங்கள்

எரிபொருள் விலை உயர்வு: போர் காரணமாக விமான எரிபொருள் (ATF) விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பு அதிகரித்துள்ளதால், நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவு பலமடங்கு உயர்ந்துள்ளது. பயணிகள் வருகை குறைவு: போர்ச் சூழலால் சுற்றுலா பயணிகள் தங்களது பயணத் திட்டங்களைத் தள்ளிப்போடுவதால், விமானங்களில் போதிய பயணிகள் கூட்டம் இருக்காது என நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

நிலைப்பாடு

இண்டிகோ நிறுவனத்தின் நிலைப்பாடு

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, ஏப்ரல் மாதம் முதல் தினசரி 2,000 உள்நாட்டு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், சர்வதேசச் சூழலைப் பொறுத்துச் சேவைகள் மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க 'எரிபொருள் கூடுதல் கட்டணம்' வசூலிக்கப்படுவதால், விமான டிக்கெட் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையில், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக உச்சவரம்பை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. குறைவான விமானங்கள் இயக்கப்படுவதால், வரும் கோடை விடுமுறை காலத்தில் விமான டிக்கெட்டுகளுக்கான தட்டுப்பாடும், விலையும் அதிகரிக்கக்கூடும் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Advertisement