LOADING...
அமெரிக்காவிலிருந்து எல்பிஜி இறக்குமதி செய்ய இந்தியா முதல்முறையாக ஒப்பந்தம்; ஆண்டு தேவையில் 10 சதவீதத்தை பூர்த்தி செய்யும்

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி இறக்குமதி செய்ய இந்தியா முதல்முறையாக ஒப்பந்தம்; ஆண்டு தேவையில் 10 சதவீதத்தை பூர்த்தி செய்யும்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 17, 2025
10:41 am

செய்தி முன்னோட்டம்

இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) இறக்குமதி செய்வதற்கானத் தங்கள் முதல் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கட்கிழமை (நவம்பர் 17) அறிவித்துள்ளார். இது இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், விநியோக ஆதாரங்களைப் பல்வகைப்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் பக்கத்தில் இதை வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நடவடிக்கை என்று வர்ணித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்த காலத்திற்கு 2.2 மில்லியன் டன் எல்பிஜி இறக்குமதி செய்யப்பட உள்ளது.

முதல் ஒப்பந்தம்

அமெரிக்கா எல்பிஜிக்கான முதல் ஒப்பந்தம்

இது இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான எல்பிஜி இறக்குமதியில் கிட்டத்தட்ட 10% ஆகும். இந்த எரிபொருள் அமெரிக்காவின் வளைகுடா கடலோரப் பகுதியிலிருந்து பெறப்படும் என்றும், அமெரிக்க எல்பிஜிக்காக இந்தியச் சந்தையுடன் போடப்பட்ட முதல் கட்டமைக்கப்பட்ட நீண்ட கால ஒப்பந்தம் இதுவென்றும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய நிறுவனங்களின் குழுக்கள் அமெரிக்காவின் முன்னணி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன.