அக்டோபர் மாதத்தில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்காத இந்தியா; தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிப்பு
செய்தி முன்னோட்டம்
உலகிலேயே ரஷ்ய எண்ணெயை இரண்டாவது அதிகளவில் வாங்கும் நாடாக இந்தியா நீடிக்கிறது. எரிசக்தி மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கையின்படி, அக்டோபர் மாதத்தில் இந்தியா ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 2.5 பில்லியன் யூரோக்களை (சுமார் ₹2,500 கோடி) செலவிட்டுள்ளது. இது முந்தைய செப்டம்பர் மாதச் செலவுடன் ஒப்பிடுகையில் மாறவில்லை. அக்டோபர் மாதத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருட்களை அதிகம் வாங்கும் நாடாக இந்தியாத் தொடர்ந்து உள்ளது. கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் எண்ணெய் பொருட்கள் ஆகியவற்றிற்கு இந்தியா மொத்தமாக 3.1 பில்லியன் யூரோக்களைச் செலுத்தியுள்ளது. இதில் கச்சா எண்ணெய்யின் பங்கு 81% ஆகும்.
புதிய தடைகள்
அமெரிக்கா புதிய தடைகள்
உக்ரைன் போருக்குப் பணம் திரட்டுவதைத் தடுக்கும் நோக்கில், ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்னெஃப்ட் மற்றும் லுகோயில் ஆகியவற்றின் மீது அமெரிக்கா அக்டோபர் 22 அன்று புதியத் தடைகளை விதித்தது. இந்தத் தடைகளால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட முக்கிய இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. முன்னதாக, பிப்ரவரி 2022 உக்ரைன் படையெடுப்புக்குப் பிறகு, மேற்கத்தியத் தடைகள் காரணமாக ரஷ்யா தனது எண்ணெயை அதிக தள்ளுபடி விலையில் வழங்கியதால், இந்தியா அதன் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெயின் பங்கை 1%க்கும் குறைவாக இருந்த நிலையில் இருந்து, விரைவாக 40% வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.