LOADING...
சீறி பாய்கிறது இந்திய பொருளாதாரம்: 3-வது காலாண்டில் 7.8% GDP வளர்ச்சி பதிவு
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியா 7.8% வளர்ச்சியை எட்டியுள்ளது

சீறி பாய்கிறது இந்திய பொருளாதாரம்: 3-வது காலாண்டில் 7.8% GDP வளர்ச்சி பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 27, 2026
04:53 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அமைச்சகம் இன்று (பிப்ரவரி 27, 2026) வெளியிட்டுள்ளது. இதன்படி, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியா 7.8% என்ற வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளது. டிசம்பர் 31, 2025-டன் முடிந்த மூன்றாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.8% ஆக உள்ளது. இது ஆய்வாளர்கள் கணித்த 7% - 8.1% என்ற வரம்பிற்குள் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த 2025-26 நிதியாண்டின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.6% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாகக் கணிக்கப்பட்ட 7.4%-ஐ விட அதிகமாகும். முந்தைய இரண்டாவது காலாண்டின் (Q2) வளர்ச்சி விகிதம் 8.2%-லிருந்து 8.4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

காரணங்கள்

புதிய அடிப்படை ஆண்டு மற்றும் மாற்றத்திற்கான காரணம்

இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில், ஜிடிபி கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டு 2011-12-லிருந்து 2022-23-க்கு மாற்றப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி பதிவுகள், இ-வாஹன் வாகனப் பதிவு தரவுகள் மற்றும் இயற்கை எரிவாயு நுகர்வு போன்ற துல்லியமான தகவல்களை இனி ஜிடிபி கணக்கீட்டில் பயன்படுத்த முடியும். மேலும், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் முறைசாரா பொருளாதாரத்தின் பங்களிப்பை இது துல்லியமாகக் காட்டும். ஜிஎஸ்டி அறிமுகம் மற்றும் கோவிட் பெருந்தொற்று காரணமாகவே இந்த மாற்றம் தாமதமானது என்று புள்ளியியல் அமைச்சகத்தின் செயலாளர் சௌரப் கார்க் தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை கணக்கில் கொண்ட Nominal GDP மூன்றாவது காலாண்டில் 8.6% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Advertisement