ஐந்தாண்டு காணாத சரிவு! ஜூலையில் மந்தமடைந்த இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி! பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி கடந்த ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மந்தமடைந்து ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவை எட்டியுள்ளது. எச்எஸ்பிசி இந்தியா வெளியிட்டுள்ள உற்பத்தித் துறை கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (பிஎம்ஐ) தகவலின்படி, கடந்த ஜூன் மாதத்தில் 54.2 ஆக இருந்த பிஎம்ஐ குறியீடு ஜூலை மாதத்தில் 53.5 ஆகக் குறைந்துள்ளது. புதிய ஆர்டர்களின் வேகம் குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தக் குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் நீடிப்பதால் இந்திய உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்தே வருகிறது.
ஏற்றுமதி
ஏற்றுமதி ஆர்டர்கள் மற்றும் உற்பத்திச் செலவு
உள்நாட்டு சந்தையில் புதிய ஆர்டர்களின் வளர்ச்சி சற்று மந்தமடைந்த போதிலும், வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர்கள் வேகமெடுத்துள்ளன.
குறிப்பாகக் கனடா, எகிப்து, இந்தோனேசியா, கென்யா, நேபாளம், தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியப் பொருட்களுக்கான தேவையும் ஆர்டர்களும் கணிசமாக அதிகரித்துள்ளன.
அதேவேளையில், போக்குவரத்து செலவுகள் உயர்ந்த போதிலும், ஒட்டுமொத்த உற்பத்திப் பொருட்களின் கொள்முதல் செலவுக்கான பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்து நிறுவனங்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
மத்திய கிழக்கு
மத்திய கிழக்கு பதற்றமும் சப்ளை சங்கிலி சவால்களும்
மத்திய கிழக்கு நாடுகளின் பகுதியில் மீண்டும் உருவாகியுள்ள போர்ப் பதற்றங்கள், உலகளாவிய சப்ளை சங்கிலியில் தடங்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை உற்பத்தியாளர்களிடையே உருவாக்கியுள்ளது.
இதனால் வரவிருக்கும் காலங்களில் மூலப்பொருட்களின் விநியோகத்தில் தாமதம் ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்திய நிறுவனங்கள் கூடுதல் மூலப்பொருட்களை வாங்கிச் சேமித்து வைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதன் காரணமாகத் தயாரிப்புப் பொருட்களின் கையிருப்பு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
எதிர்பார்ப்பு
வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்பு
உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஜூலையிலும் சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்த 29 மாத காலத் தொடர் வளர்ச்சியில் இதுவே மிக மெதுவான வேலைவாய்ப்பு வளர்ச்சியாகப் பதிவாகியுள்ளது.
இருப்பினும், புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், சந்தை விரிவாக்கம் மற்றும் விளம்பர உத்திகள் காரணமாக வரும் காலங்களில் சந்தை நிலைமை சீரடைந்து தேவைகள் மீண்டும் அதிகரிக்கும் என்ற நேர்மறையான நம்பிக்கையை இந்திய உற்பத்தியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.