எங்கிருந்து வேண்டுமானாலும் எரிசக்தி: போருக்கு நடுவே இந்தியாவின் அதிரடி 'பிளான் பி'
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை சமாளிக்க, ரஷ்யா உட்பட உலகின் எந்த சந்தையிலிருந்தும் கச்சா எண்ணெய் மற்றும் LPG திரவ எரிவாயுவை வாங்க தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்,"ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யப் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் உத்திகளை வகுத்துள்ளோம்". "தேவைப்பட்டால் ரஷ்யாவிடமிருந்து கூடுதல் எரிவாயுவை வாங்குவதற்கும் தயங்க மாட்டோம்," என்று குறிப்பிட்டார். தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யப் பல நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு நிலைமை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்தியா
தற்போதைய நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு கையிருப்பு போதுமான அளவில் உள்ளதாகப் பெட்ரோலிய அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. நாட்டின் அனைத்து எரிபொருள் நிலையங்களும் தடையின்றி இயங்கி வருகின்றன. சிஎன்ஜி (CNG) மற்றும் பிஎன்ஜி (PNG) விநியோகம் 100% சீராக உள்ளது. எரிசக்தி சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், வணிக ரீதியான எல்பிஜி பயனர்கள் பிஎன்ஜி (PNG) இணைப்புக்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக விரைவான இணைப்புகள் மற்றும் சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. மேலும், எரிபொருளைப் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தில் பொருட்களைக் குவிக்க வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.