2024-25 முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7% ஆக குறைவு; நிதியமைச்சகம் அறிவிப்பு
நிதியாண்டு 2024-25 இன் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.7% ஆக வளர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது முந்தைய 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் பெற்ற 8.2% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது குறைவாகும். மேலும், நிதியாண்டு 2023-24இன் கடைசி காலாண்டில் 7.8% வளர்ச்சியடைந்த நிலையில், அதைவிடவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய ரிசர்வ் வங்கியின் கணிப்பு முதல் காலாண்டில் 7.1% வளர்ச்சி ஆக இருக்கும் என கணித்த நிலையில், அதைவிடவும் குறைவாக உள்ளது. இதற்கிடையே ஐசிஆர்ஏ 6% வளர்ச்சியையும், எஸ்பிஐ மற்றும் ஆனந்த் ரதி ரிசர்ச் ஆகியவை முறையே 7.1% மற்றும் 7% வளர்ச்சி விகிதத்தை கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதியமைச்சக அறிக்கையின் இதர சிறப்பம்சங்கள்
நாமினல் ஜிடிபி 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டின் 8.5% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில், 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 9.7% வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளது. உண்மையான ஜிவிஏ முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.3% வளர்ச்சி விகிதத்தை கண்டிருந்த நிலையில், தற்போதைய 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.8% ஆக குறைந்துள்ளது. 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த ஜிவிஏ வளர்ச்சியானது கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டாம் நிலைத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியால் உந்தப்பட்டது.