சறுக்கியதா இந்தியாவின் டாலர் கையிருப்பு? கடந்த வாரத்தில் 709 பில்லியன் டாலராகக் குறைந்தது
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மார்ச் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கணிசமாகக் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. முந்தைய வாரத்தில் இருந்ததை விட 7.052 பில்லியன் டாலர் குறைந்து, தற்போது மொத்த கையிருப்பு 709.759 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் எட்டப்பட்ட வரலாற்றுச் உச்சமான 725.727 பில்லியன் டாலரில் இருந்து தொடர்ந்து இரண்டாவது வாரமாக இந்தக் கையிருப்பு சரிவைச் சந்தித்துள்ளது.
நாணய சொத்துக்கள்
அந்நிய நாட்டு நாணய சொத்துக்கள் சரிவு
அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாட்டு நாணய சொத்துக்கள், மார்ச் 13 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 7.678 பில்லியன் டாலர் குறைந்து 555.568 பில்லியன் டாலராக உள்ளது. டாலர் மதிப்பில் குறிப்பிடப்படும் இந்தச் சொத்துக்களில் யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்க டாலர் அல்லாத மற்ற நாணயங்களின் மதிப்பு மாற்றங்களும் (ஏற்றம் அல்லது இறக்கம்) அடங்கும்.
தங்கம்
ஜொலிக்கும் தங்கம்: கையிருப்பு மதிப்பு உயர்வு
ஒட்டுமொத்த கையிருப்பு குறைந்தாலும், இந்தியாவின் தங்கம் கையிருப்பு மதிப்பு இந்த வாரத்தில் அதிகரித்துள்ளது. தங்கம் கையிருப்பின் மதிப்பு 664 மில்லியன் டாலர் உயர்ந்து 130.681 பில்லியன் டாலராக எட்டியுள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம்
எஸ்டிஆர் மற்றும் சர்வதேச நிதியக கையிருப்பு
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மற்ற நிதி அங்கங்களின் நிலவரம் வருமாறு: சிறப்பு வரைதல் உரிமைகள் (SDRs) 23 மில்லியன் டாலர் குறைந்து 18.697 பில்லியன் டாலராக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் இருப்பு 15 மில்லியன் டாலர் குறைந்து 4.814 பில்லியன் டாலராக உள்ளது.
கையிருப்பு
கையிருப்பு குறைவதற்கான பின்னணி
கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி இந்தியா தனது வாழ்நாள் சாதனையாக 725 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பை எட்டியிருந்தது. இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வரும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட தலையீடுகள் காரணமாக இந்தக் கையிருப்பில் சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.