LOADING...
இந்தியா-இங்கிலாந்து FTA: இந்திய விவசாயிகளுக்கு ஒரு வெற்றி வாய்ப்பாக மாறும்!
Free Trade Agreement வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக கையெழுத்திடப்பட உள்ளது

இந்தியா-இங்கிலாந்து FTA: இந்திய விவசாயிகளுக்கு ஒரு வெற்றி வாய்ப்பாக மாறும்!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2025
11:45 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) இடையே வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement - FTA) வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக கையெழுத்திடப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இருநாள் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய அம்சமாக, இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயத்துறையின் எதிர்காலத்தை நேரடியாகப் பாதிக்கும் முக்கிய திருப்புமுனையாக இருக்கிறது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் விவசாய மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் பெருமளவிலான வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரி இல்லாத சந்தை அணுகல், நெறிப்படுத்தப்பட்ட சான்றிதழ் நடைமுறைகள் மற்றும் உணர்திறனுள்ள உற்பத்திகள் மீதான பாதுகாப்புடன், இந்திய விவசாயிகள் இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய பயனாளர்களாக களமிறங்க உள்ளனர்.

முக்கிய நன்மைகள்

FTA - விவசாயிகளுக்கு வழங்கும் முக்கிய நன்மைகள்

முக்கிய ஏற்றுமதி பொருட்களுக்கு வரி நீக்கம்: மஞ்சள், மிளகு, ஏலக்காய், ஊறுகாய், மாம்பழக் கூழ், பருப்பு வகைகள் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு வரி இல்லாத சந்தை அணுகல் வழங்கப்படுகிறது. இது உலக சந்தைகளில் போட்டித்தன்மையை அதிகரிக்கிறது. UK இன் சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் இந்தியப் பொருட்களின் நுழைவு திறன் பெருகுவதால், பண்ணை அளவில் அதிக வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உருவாகும். பால் பொருட்கள், ஆப்பிள், ஓட்ஸ், சமையல் எண்ணெய்கள் போன்ற முக்கிய உள்நாட்டு உற்பத்திகளைச் சந்தை திறப்பிலிருந்து விலக்குவதன் மூலம் உள்ளூர் விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றனர்.

மீன்வளத்துறை

மீன்வளத்துறைக்கு புதிய வாய்ப்புகள்

ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மீன்வளத்துறையினருக்கு, UK இன் $5.4 பில்லியன் கடல் உணவுச் சந்தை தற்போது திறக்கப்பட உள்ளது. இறால், சூரை, மீன் தீவனங்கள் போன்றவைகள் இப்போது வரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியும். தொழில்நுட்ப தடைகள் (TBT) குறைக்கப்பட்டதால் ஏற்றுமதியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் தரநிலைகளை பூர்த்தி செய்வது எளிதாகும். SPS நடைமுறைகள் மூலம் இங்கிலாந்து தரங்களுக்கு இணையாக செயல்பட முடியும்.

புதிய சந்தைகள்

புதிய பொருட்கள் - புதிய சந்தைகள்

பலாப்பழம், தினை, கரிம மூலிகைகள் போன்ற வளர்ந்து வரும் பொருட்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகின்றன. காபி, மசாலாப் பொருட்கள், தேயிலை ஆகியவையும் வரி இல்லாத நிலையில் அதிக ஏற்றுமதி எதிர்பார்க்கின்றன. கைவினைப் பானங்கள்- நாசிக்கிலிருந்து ஒயின், கோவாவில் இருந்து ஃபெனி, கேரளாவிலிருந்து கள் போன்றவை UK சந்தையில் GI பாதுகாப்புடன் நுழைவதற்கான வாய்ப்பை பெறுகின்றன. இந்தியாவை ஒரு "பண்ட உற்பத்தியாளரிடம் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதி சக்தியாக" மாற்றுவதற்கான அடித்தளத்தை இந்த FTA அமைக்கிறது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு, சான்றிதழ் மற்றும் தரம் மேம்பாடு, மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வர்த்தக வாய்ப்புகள் ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் மூலம் வலுப்பெறுகின்றன.