உளகளவில் சீனாவிற்கு மாற்றாக முக்கியமான உற்பத்தி மையமாக வளர்ந்து வரும் இந்தியா
சமீபத்தில் இந்தியாவில் தங்களது புதிய பிக்சல் 8 ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தது கூகுள். ஏற்கனவே ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது உற்பத்தி நடவடிக்கைகள் பெருக்கி வரும் நிலையில், கூகுளின் இந்தப் அறிவிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கூகுளின் இந்த முடிவு இந்தியா ஒரு புதிய உற்பத்தி மையமாக மாறுவதற்கான திருப்புமுனையாகக் கூட இருக்கலாம் என தாங்கள் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று. கூகுளின் இந்த முடிவு வெறும் ஒரு நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவாக இல்லாமல், ஒட்டுமொத்த விநியோக சங்கிலி மாற்றத்தின் பிரதிபலிப்பாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாறும் உற்பத்தி:
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு தயாரிப்புகளுக்கும், முக்கியமாக தொழில்நுட்ப நிறுவங்களின் முக்கியமான உற்பத்தி மையமாக விளங்கி வந்தது சீனா. ஆனால், சீன மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து வரும் அரசியல் மோதல்கள், உற்பத்தி ஒரே இடத்தில் குவிக்காமல் பல்வகைப்படுத்தும் பெரு நிறுவனங்களின் முடிவு ஆகியவை மொத்தமாக சேர்த்து, தங்களுடைய தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான புதிய மையாக இந்தியாவே தேர்ந்தெடுக்க வைத்திருக்கின்றன. மேலும், அந்நிறுவனங்களின் முடிவை ஊக்கப்படுத்தும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகளையும், திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருவது இந்தியாவின் உற்பத்தி மையக் கனவிற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.
சீனாவில் குறைந்த பெருநிறுவனங்களின் முதலீடு:
2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகள் 400% அதிகரித்திருக்கின்றன. இதே காலக்கட்டத்தில் சீனாவில் அந்நிய நாட்டு நிறுவனங்களின் முதலீடு கணிசமான அளவில் குறைந்திருக்கிறது. தொடர்ந்து நடைபெறும் இந்த மாற்றங்களால் 2030ம் ஆண்டிற்குள் 3 ட்ரில்லியன் டாலர்கள் அளவிற்கு பொருளாதார இழப்பை சீனா சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதே நிலை தொடரும் பட்சத்தில் இனி வரும் ஆண்டுகளில் உலகளாவிய பெரு நிறுவனங்களுக்கு சீனாவிற்கு மாற்றாக மற்றொரு உற்பத்தி மைய தேர்வாக இந்தியா மாறி, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கும் என்பது உறுதி.