புதிய அத்தியாயம்; ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைனுடன் வர்த்தக ஒப்பந்தந்தை இறுதி செய்வதில் இந்தியா தீவிரம்
செய்தி முன்னோட்டம்
இந்தியா, சர்வதேச வர்த்தக உறவுகளை ஆழமாக்கும் நோக்கில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டான் ஃபாரெலை சனிக்கிழமை (நவம்பர் 8) அன்று சந்தித்து இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளை ஆய்வு செய்தார். சமநிலையுடனும், இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் வகையிலும் ஒரு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (CECA) விரைவாக முடிப்பதற்கான உறுதிப்பாட்டை இரு நாடுகளும் மீண்டும் வலியுறுத்தின.
ஒப்பந்தம்
2022இல் அமலுக்கு வந்த முதற்கட்ட ஒப்பந்தம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே முதல் கட்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (ECTA) 2022 டிசம்பரில் நடைமுறைக்கு வந்தது. தற்போது நடைபெற்று வரும் CECA பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒத்துழைப்பின் எல்லையை மேலும் விரிவாக்க வழிவகுக்கும். இதற்கிடையில், நியூசிலாந்துடன் முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்து இந்திய வர்த்தக அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது வர்த்தகப் பரிமாற்றத்தை மேம்படுத்தி, முதலீட்டு உறவுகளைப் பலப்படுத்தி, விநியோகச் சங்கிலியின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். நவம்பர் 3 முதல் 7 வரை ஆக்லாந்து மற்றும் ரோட்டருவாவில் நான்காவது சுற்று FTA பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
பஹ்ரைன்
பஹ்ரைனுடனும் பேச்சுவார்த்தை
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மட்டுமின்றி, பஹ்ரைனுடனும் இந்தியா தனது வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. நவம்பர் 3 அன்று, இரு நாடுகளும் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. மேலும், விரைவில் முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் கட்டத்தில் உள்ளதாகவும் அறிவித்தன. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பஹ்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லத்தீப் பின் ரஷித் அல் சயானியைச் சந்தித்த போது, பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், ஃபின்டெக், விண்வெளி மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மின்னணுவியல், பெட்ரோலியப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, அடிப்படை உலோகங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றில் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான உறுதிப்பாட்டை இரு நாடுகளும் கூட்டறிக்கையில் எடுத்துரைத்தன.