மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிர்ச்சிச் சம்பவம்
செய்தி முன்னோட்டம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றி வந்த ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தனர். மாலியில் அதிகரித்து வரும் உள்நாட்டுக் குழப்பத்தையும், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமீன் (JNIM) மற்றும் ஐஎஸ் போன்ற தீவிரவாதக் குழுக்களின் அச்சுறுத்தலையும் எதிர்த்துப் போராடி வரும் நிலையில் இந்தக் கடத்தல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, வியாழக்கிழமை அன்று கோப்ரி அருகே ஐந்து இந்தியத் தொழிலாளர்கள் துப்பாக்கி ஏந்திய சிலரால் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. கடத்தப்பட்ட இந்தியத் தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைதியின்மை
அமைதியின்மையை கட்டுப்படுத்த திணறும் ராணுவம்
கடத்தப்பட்டவர்களின் சக இந்திய ஊழியர்கள், நாட்டின் தலைநகரான பமாக்கோவிற்குப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சியின் கீழ் உள்ள மாலி, நாட்டில் அதிகரித்து வரும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்தத் திணறி வருகிறது. நாட்டில் வெளிநாட்டினரைக் கடத்தும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. அல்கொய்தாவுடன் தொடர்புடைய JNIM தீவிரவாதக் குழு, மாலியில் ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அத்துடன், பமாக்கோவுக்கு வெளியேயும் முற்றுகை இட்டுள்ளதால், தலைநகர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. JNIM குழுவானது 2017 ஆம் ஆண்டு முதல் மாலியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ளதுடன், முக்கிய உள்கட்டமைப்புகளையும் அழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.