LOADING...
டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு
டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும்

டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2025
04:59 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் 2025 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை (நவம்பர் 8) அறிவித்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்குப் பிறகு இந்தத் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், நாடாளுமன்றப் பணிகளின் அவசரத் தேவையைப் பொறுத்து இந்தத் தேதிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், நாடாளுமன்ற ஆய்வுக்கு அரசு அஞ்சுவதாகக் குற்றம் சாட்டினார்.

சிறப்பு வாக்காளர் திருத்தம்

சிறப்பு வாக்காளர் திருத்தம் பிரச்சினையை கையிலெடுக்க எதிர்க்கட்சிகள் தீவிரம்

டெரிக் ஓ பிரையன் தனது எக்ஸ் தள பதிவில், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது குழுவும் நாடாளுமன்றத்தைப் எதிர்கொள்ளும் பாராளுமன்ற-போபியா (Parliament-ophobia) என்ற கடுமையான பயத்தில் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார். இம்முறை கூட்டத்தொடர், கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரைத் தொடர்ந்து வருகிறது. மழைக்காலக் கூட்டத்தொடரின்போது ஒரு மாதம் அவை நடவடிக்கைகள் இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் குறைவான உற்பத்தித்திறனே பதிவானது. இந்த ஒரு மாதக் கூட்டத்தொடரின் போது, மக்களவையில் 12 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இதற்கிடையே, வரவுள்ள குளிர்கால கூட்டத் தொடரில் சிறப்பு வாக்காளர் திருத்த செயல்முறையை கையிலெடுக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.