LOADING...
இன்கம் டேக்ஸ் செலுத்துவதில் இனி சிக்கல் இல்லை; உதவிக்கு வருது 'கர் சாதி' ஏஐ; வரி கட்டுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
வருமான வரித்துறையின் புதிய இணையதளம் மற்றும் 'கர் சாதி' ஏஐ உதவியாளர் அறிமுகம்

இன்கம் டேக்ஸ் செலுத்துவதில் இனி சிக்கல் இல்லை; உதவிக்கு வருது 'கர் சாதி' ஏஐ; வரி கட்டுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Sekar Chinnappan
Apr 02, 2026
06:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய வருமான வரித்துறை, வரி செலுத்தும் முறையை எளிமையாக்கவும், வரி செலுத்துவோரின் சந்தேகங்களைத் தீர்க்கவும் 'கர் சாதி' (Kar Saathi) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியாளர் மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் மற்றும் எளிய விதிமுறைகளை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த டிஜிட்டல் புரட்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 'பிராரம்பா 2026' (PRARAMBH 2026) என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தொடங்கியுள்ளது. வரி ஏய்ப்பு இல்லாத, நேர்மையான வரி செலுத்தும் முறையை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

சிறப்பம்சங்கள்

கர் சாதி ஏஐ உதவியாளரின் சிறப்பம்சங்கள்

புதிய இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள 'கர் சாதி' என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாட்பாட் ஆகும். இது வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் வரி செலுத்துவோரின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்வது எப்படி, புதிய வரி விதிப்புகள் என்ன, படிவங்களை எங்குப் பதிவிறக்கம் செய்வது போன்ற அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த ஏஐ கருவி விளக்கம் அளிக்கும். இதற்காகப் பயனர்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. தொழில்நுட்ப ரீதியாக மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ள இந்தத் தளம், சாதாரண மக்களும் வரி விதிமுறைகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள ஒரு பாலமாக அமையும்.

பிராரம்பா 2026

விழிப்புணர்வு மற்றும் எளிய விதிமுறைகள்

மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் ரவி அகர்வால், 'பிராரம்பா 2026' பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். PRARAMBH என்பது "Policy Reform and Responsible Action for Mission Viksit Bharat" என்பதைக் குறிக்கிறது. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வரி விதிமுறைகள் குறித்து வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் வரி விதிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வருமான வரி படிவங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதால், வரி செலுத்துவோர் சிக்கலின்றித் தங்களது பணிகளை முடிக்க முடியும்.

Advertisement