'அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் AI வசதி': ரிலையன்ஸ் ஜியோவின் மிகப்பெரும் வாக்குறுதி
இந்திய குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு உதவும் வகையில், இந்தியா சார்ந்த AI மாடல்கள் மற்றும் AI-யால் இயங்கும் டொமைன்களை உருவாக்க ஜியோ நிருவனம் ஆர்வமாக இருப்பதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி இன்று தெரிவித்தார். மேலும், 'அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் AI வசதி' என்ற மிகப்பெரும் வாக்குறுதியையும் அவர் வழங்கியுள்ளார். ஜியோவின் அடுத்த கட்ட வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவை(AI) முன்னிறுத்தி செல்வதில் அமைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸின் வருடாந்திர பொது கூட்டம்(AGM) 2023 இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. அப்போது முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் உரையாற்றி முகேஷ் அம்பானி, இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸின் வருடாந்திர பொது கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசியதாவது:
உலகளாவிய AI புரட்சியானது உலகை மறுவடிவமைத்து வருகிறது. அறிவார்ந்த பயன்பாடுகள், தொழில்கள், பொருளாதாரங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கூட எதிர்பார்த்ததை விட மிக விரைவில் இந்த AI புரட்சி மாற்றியமைக்கும். உலக போட்டியாளர்களுக்கு மத்தியில் இந்தியாவை சமமாக நிறுத்த, புதுமை, வளர்ச்சி மற்றும் தேசிய செழிப்புக்கு இந்தியா AI ஐப் பயன்படுத்த தொடங்க வேண்டும். நம் நாட்டு மக்களுக்கு நான் இப்போது ஒரு வாக்குறுதியை அளிக்கிறேன். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும் என்று ஜியோ உறுதியளித்தது. நாங்கள் அதை செய்து காட்டினோம். இன்று அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் AI வசதி வழங்கப்படும் என்று ஜியோ உறுதியளிக்கிறது. அதையும் நாங்கள் செய்து காட்டுவோம். என்று கூறியுள்ளார்.