ஐபிஎல்: ஆர்சிபி அணியில் பங்குகளை வாங்க காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை
செய்தி முன்னோட்டம்
கேஜிஎஃப், காந்தாரா மற்றும் சலார் போன்றப் பிளாக்பஸ்டர் திரைப்படங்களைத் தயாரித்த முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி பங்கு வாங்க ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய உரிமையாளரான டியாகோ இந்தியா நிறுவனம், ஐபிஎல் 2026 க்கு முன்னதாகவே அணியை விற்கத் திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், விஜய்கிராகந்தூர் தலைமையிலான ஹோம்பாலே நிறுவனம், டியாகோ நிறுவனத்துடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
டிஜிட்டல் பார்ட்னர்
ஆர்சிபியின் டிஜிட்டல் பார்ட்னர்
முன்னதாக, ஹோம்பாலே ஃபிலிம்ஸ் ஏப்ரல் 2023 முதல் ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பார்ட்னராகச் செயல்பட்டு வருகிறது. ரஜத் படிதார் தலைமையில் ஐபிஎல் 2025 கோப்பையை வென்று தனது கோப்பை வறட்சியைப் போக்கிய ஆர்சிபி அணியின் மதிப்பு தோராயமாக ₹17,000 கோடி வரை உயர்ந்துள்ளது. ஹோம்பாலே மட்டுமல்லாமல், சிரோதா இணை நிறுவனர் நிகில் காமத், அதானி குழுமம், ஜேஎஸ்டபிள்யூ குழுமம், சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ஆதார் பூனாவாலா போன்றப் பெரும் முதலீட்டாளர்களும் ஆர்சிபியைக் கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஒப்பந்தம் உறுதியானால், கன்னடத் திரையுலகின் முக்கியப் புள்ளி, கர்நாடகத்தின் கிரிக்கெட் கலாச்சாரத்துடன் இணையும்போது, ஐபிஎல் 2026 க்கு முன்னதாகவே ஆர்சிபியின் உள்ளூர் ரசிகர் பட்டாளம் மத்தியில் அதன் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.