அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பாக பைஜூஸூக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை?
செய்தி முன்னோட்டம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் முன்னணி கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வகைகளிலும் பிரச்சினையில் சிக்கி தவித்து வருகிறது.
முக்கியமாக கொரோனா காலத்தில் புதிய நிறுவனங்களைக் கையகப்படுத்துவதற்காக அமெரிக்க கடன் நிறுவனங்களிடம் பைஜூஸ் நிறுவனம் வாங்கிய கடன் தொடர்பாக, அந்நிறுவனங்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, அவை இன்னும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாகக் கூறிய பைஜூஸ் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகக் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்திலும், அந்நிய செலாவணி விதிமுறை மீறல் தொடர்பாக பைஜூஸ் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
வணிகம்
தகவல்களை மறுத்த பைஜூஸ்:
தாங்கள் எந்த விதமான அந்நிய செலாவணி விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை எனவும், அமலாக்கதுறையிடமிருந்து எந்த நோட்டீஸும் வரவில்லை எனவும், தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறது பைஜூஸ்.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின்படி, 2011ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை அந்நிய நேரடி முதலீடுகளாக ரூ.28,000 கோடியை பைஜூஸ் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளாக ரூ.9,754 கோடி வெளிநாடுகளுக்கு பைஜூஸ் நிறுவனம் கொண்டு சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டு முதலீடு தொடர்பான விதிமுறைகளை மீறியதாகவும், அதற்காக ரூ.9,000 கோடியை பைஜூஸ் நிறுவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறி அமலாக்கத்துறை அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாக, அதனை மறுத்திருக்கிறது பைஜூஸ்.