
12% மாற்றம் 28% வரி அடுக்குகள் நீக்கம்; ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு அமைச்சர்கள் குழு ஒருமனதாக ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு (GoM), தற்போதுள்ள நான்கு அடுக்கு அமைப்பை, 5% மற்றும் 18% என்ற இரண்டு முக்கிய வரி அடுக்குகளாக குறைப்பதற்கான திட்டத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. ஜிஎஸ்டி 2.0 என்று அழைக்கப்படும் இது, வரி அமைப்பை எளிமையாகவும், பொதுமக்களுக்கு சாதகமாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, தற்போதுள்ள 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்படும். புதிய அமைப்பின் கீழ், 12% அடுக்கில் இருந்த பொருட்களில் 99% குறைந்தபட்சமான 5% வரி விதிப்புக்குள் கொண்டுவரப்படும். அதேபோல, 28% வரி இருந்த பொருட்களில் 90%க்கும் மேற்பட்டவை 18% வரி விதிப்புக்கு மாற்றப்படும்.
40 சதவீதம்
40 சதவீத வரி விதிப்பிற்கு உள்ளாகும் பொருட்கள்
புகையிலை போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் உயர் ரக கார்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு 40% என்ற புதிய வரி விகிதம் விதிக்கப்படும். இந்த மறுசீரமைப்பு நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு பெரும் நன்மை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருந்துகள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் ஆடைகள் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மலிவாகலாம். அதேபோல, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த எளிமையான மற்றும் வெளிப்படையான வரி அமைப்பு நடுத்தர வர்க்கம், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று கூறியுள்ளார்.