
ஜிஎஸ்டி விலக்கால் இனி குறைந்த விலையில் காப்பீடு; யார் யாருக்கு பலன்கள் கிடைக்கும்?
செய்தி முன்னோட்டம்
கோடிக்கணக்கான பாலிசிதாரர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில், தனிநபர் ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டு பிரீமியங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) முழு விலக்கு அளிப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த முக்கிய மாற்றம் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, ஜிஎஸ்டி அமைப்பை 5% மற்றும் 18% என இரு அடுக்கு வரி அமைப்பாக மாற்றுவதின் ஒரு பகுதியாகும். இந்த முடிவால், காப்பீடு சேவைகள் இனி பொதுமக்களுக்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இதற்கு முன்பு, இந்தக் காப்பீடுகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.
குறைவு
எவ்வளவு குறையும்
உதாரணமாக, ₹20,000 அடிப்படை பிரீமியம் கொண்ட ஒரு பாலிசிக்கு, வரி உட்பட ₹23,600 செலுத்த வேண்டியிருந்தது. இனி, இந்த வரி விலக்கு காரணமாக ₹20,000 மட்டும் செலுத்தினால் போதும். இந்த வரி விலக்கு, டேர்ம் லைஃப், யூலிப் (ULIP) மற்றும் எண்டோவ்மென்ட் பாலிசிகள் உட்பட அனைத்து தனிநபர் காப்பீட்டு வகைகளுக்கும் பொருந்தும். மேலும், அவற்றின் மறு காப்பீட்டுக்கும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், அதிகமான தனிநபர்கள் காப்பீடு எடுக்கவும், அதன் மூலம் காப்பீட்டின் பயன்பாட்டை நாட்டில் அதிகரிக்கவும் முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. ஏற்கனவே சில அமைச்சர்கள் இந்தக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.