
ஜிஎஸ்டி வரி கட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு?
செய்தி முன்னோட்டம்
ஜிஎஸ்டி வரி செலுத்துபவர்கள், ரூ.1 கோடி வரை பரிசு வெல்லும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு.
இனி சில்லறையாகவோ அல்லது மொத்தமாகவோ நாம் வாங்கும் பொருளுக்கு ஜிஎஸ்டி வரிப் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அதற்கான GSTIN எண்ணுடன் கூடிய பில்லை மறக்காமல் கேட்டு வாங்குங்கள். ஏனெனில் அதன் மூலம், உங்களுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆம், 'மேரா பில் மேரா அதிகார்' என்ற புதிய திட்டத்தை இந்த மாதத்திலேயே கூட மத்திய அரசு அறிமுகப்படுத்தலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாதந்திர வாரியாகவோ அல்லது காலாண்டு வாரியாகவோ குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பில்களுக்கு பரிசுத் தொகை அளிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு
'மேரா பில் மேரா அதிகார்' திட்டம்:
மேற்கூறியத் திட்டத்தின் கீழ், புதிய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலி ஒன்றை வடிவமைத்து வருகிறது மத்திய அரசு.
இந்தச் செயலியில் நாம் பொருட்கள் வாங்கியதற்கான பில்களை பதிவேற்றம் செய்ய முடியும். ஒரு நபர் ஒரு மாதத்தில் 20 பில்கள் வரை பதிவேற்றம் செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.200-க்கு பொருட்களை வாங்கியதற்கான பில்லாக அது இருக்க வேண்டும், அவ்வளவு தான்.
ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு காலாண்டும் இந்த பில்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பில்லுக்கு லட்சங்களிலோ அல்லது கோடியாகவோ பரிசு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ஒரு வணிகத்திற்கு முறையாக வரி செலுத்துவது, நுகர்வோர் பயன்பாட்டை அதிகரிப்பது மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு உள்ளிட்ட பல்வேறு குறிக்கோள்களை உள்ளிடக்கி இந்தத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.